விறகுகள் - பகுதி 1

 "அம்மா சொல்லு... அம்மா சொல்லு..." 

சிணுங்கிக்கொண்டிருந்த, குழந்தை தன் பொக்கை வாயை திறந்து சிரித்தது. அதன் பட்டுபோன்ற தலைமயிரை தடவிக்கொடுத்தாள்; அள்ளி அணைத்து முத்தம் வைத்து உச்சி முகர்ந்தாள். அதன் மென்மையான வயிற்றில் வருடிக்கொடுக்க, மேலும் சிணுங்கிப் பலமாகச் சிரித்தது. குழந்தையை தூக்கிக்கொண்டு மூலையில் நிற்கவைப்பட்டிருந்த மின் விசிறையை நோக்கியவாறு அமர்ந்தாள். மஞ்சத்தின் மேல் இருந்த விளையாட்டு பொருளை எடுத்து ஆட்டினாள். 

"அம்மா சொல்லு… அம்மா... அம்ம்…மா" 

"லிண்டா!" 

திடுக்கிட்டு நுழைவாயில் நோக்கி திரும்பினாள். வீட்டின் தலைவி அதிருப்தியான முகத்துடன் நின்று கொண்டிருந்தார். கையில் பிடித்திருந்த நாழிதற்ச் சுருளை தரையில் எறிந்துவிட்டு, "குழந்தைக்கு அப்படி சொல்லித்தராதனு எத்தனை முறை சொல்லிருக்கேன்? இனிமே இப்படி செய்றதா இருந்தா வீட்டுக்கு வராத" என குழந்தையை தன் கைகளிலிருந்து பறித்துக்கொண்டார். 

"மேடம். அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம்" என்று தலைவியின் பின்னாலேயே சென்றாள் லிண்டா. இருவரும் சமையலறைக்குள் நுழைந்தார்கள். "அவ முகத்த பார்க்கணும்ங்கிற ஆசைலதான் மேடம் வரேன்." மின் அடுப்பில் ஒரு சொம்பை வைத்தாள், தலைவி.

லிண்டாவை பார்த்து, "அதுக்காகத்தான்..." இரு கரண்டி பால் மாவை பாக்கெட்டிலிருந்து எடுத்து கொஞ்சம் சொம்பில் கொட்டினார், "நீ பண்ணிக்கொடுத்த அந்த சத்தியத்திற்காகத்தான் உன்னை இங்க இவ்வளவு நாளா சகிச்சுட்டு இருக்கேன்." சிறிது சக்கரை இட்டு தண்ணீர் ஊற்றினார். 

"ஆமாம் மா, அதுக்கு உங்களுக்கு காலம் முழுக்க நன்றி சொல்வேன். ஆனா, நான்தான் சத்தியத்தை மீறலையே?"

குழந்தையை ஆட்டிக்கொண்டிருந்தவள், "சத்தியத்தை மீறலையா? அங்க என்ன சொல்லிட்டு இருந்த குழந்தைட்ட?" 

தலைவியின் அந்த கூரியப்பார்வை என்னவோ செய்தது. "அது...." என்ன சொல்வதென்று தெரியவில்லை லிண்டாவிற்கு. 

"வந்து ரொம்ப நேரமாச்சுல்ல? கிளம்பு!" என பாராமுகமாய் சொன்னாள் தலைவி. "ஜோ ஜோ ஜோ.. பால் குடிக்கலாமா?"

குழந்தை தன் தாய் மொழிவதை கேட்டு பூத்த புன்முறுவலை பார்த்துவிட்டு மெலிதான புன்னகையுடன் வெளியேறினாள் லிண்டா. ஆதவன் மறையத் தொடங்கியிருந்தான். கூடடையும் பறவைகளின் குதூகல ஒலி எங்கும் நிரம்பியிருந்தது. பெரிய பெரிய வீடுகள் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த அந்த குடியிருப்பு இப்போதுதான் மனிதர்கள் தென்பட்டன. மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் அந்த பகுதியிலிருந்து வெளியேறி பிரதான சாலைக்கு நடந்து சென்றாள். எப்பொழுதும் குழந்தை அமினாவைக் காண தனது தோழியுடன் வருவது வழக்கம். இன்று அவளால் வரமுடியாதலால் தனியே இலவச பேருந்துக்கு காத்திருந்தாள். சிறுது நேரத்திலேயே பேருந்து வந்து நின்றது. அதிசயமாக கூட்டமில்லாமல் காணப்பட்டது, இல்லையேல் சார்டின் மீன்களை அடைத்த புட்டியைப் போலல்லவா காட்சிதரும். 

பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். ‘இன்று, லீசா மேடம் அவ்வாறு பேசியது மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆம், தவறதுதான் அவருடைய குழந்தை என்றாகும் போது, நான் அவள்மீது உரிமைகளை எடுத்துக் கொள்ளக்கூடாதுதான். ஆனால் அந்த ரோஜா முகத்தை எப்படி பார்க்காமலோ, கொஞ்சாமலோ என்னால் இருக்க இயலும்? ஒன்றரை வருடங்களாக நானும் முயற்சிக்கத்தான் செய்கிறேன்.' பேருந்து சாலை நிறுத்தத்தில் சமிஞைக்காக காத்து நின்றது. ஜன்னலின் வெளியே ஒரு வாகனத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டாள். அந்த குழந்தைகளின் பெற்றோர்களோ என்னவோ அவர்களின் சேஷ்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். லிண்டாவின் மனம் ஏக்கத்தில் மூழ்கியது. 'அமினாவை நான் மறப்பது கனவிலும் சாத்தியமல்ல.'

@@@@@@@@@@@@@@@@@

மலேசியாவில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சிறுநகரங்களில் பொதுவாக வெளிநாட்டவர் தங்குவது வாடகை வீடுகளிலும், அடுக்குமாடி வீடுகளிலும்தான். ஆனால், வங்காளதேசம், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் நேபால் போன்ற அயல் நாட்டு தொழிலாளர்களின் வருகை அதிகரிக்கவே, அவர்கள் பயன்படுத்தப்படாத கடைகளை வாடகை எடுத்து பலர் கூடி தங்குமிடமாக மாற்றிக் கொள்கிறார்கள். கடை உரிமையாளர்களிடமிருந்து தொழில் நிறுவனங்கள் கடைகளை வாடகைக்கு பெறுவதும் அதில் தங்கள் தொழிலாளர்களை தங்கவைத்து அவர்களது சம்பளப்பணத்திலிருந்து வாடகையைப் பெறுவதும் வழக்கமான ஒன்று. அப்படி ஒரு தங்குமிடமாக மாற்றப்பெற்ற ஒரு கடையில்தான் லிண்டா வசித்து வந்தாள். 

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து எளிமையான சமையல் செய்து கணவனை எழுப்பிவிட்டு வேலைக்கு புறப்பட்டாள். மாடியிலிருந்து கடை வீதியில் இறங்கிவிட்டு அவளது நேபாள தோழி தேவியை எதிர்நோக்கி காத்திருந்தாள். பத்து நிமிடங்களில் மலர்ந்த முகத்தோடு தேவி தன்னை நோக்கி ஓடிவருவதை லிண்டா பார்த்தாள். "சேலமட் பாகி" என இருவரும் வாழ்த்திக் கொண்டனர். 

தேவி அவசர அவசரமாக, "சாப்பாடெல்லாம் எடுத்துகிட்டீயா, லிண்டா?"

"ஆம், வா போகலாம்" என்று இருவரும் கிளம்பினார்கள். வேலையிடம் நடந்து செல்லும் தூரமே ஆதலால் நடந்தே சென்றடைந்தனர். முன் வாயிலில் தங்கள் அடையாள அட்டைகளை காட்டி, வருகை பதிவு செய்துவிட்டு உள் நுழைந்தனர். பாதுகாப்பு பெட்டகத்தில் தங்களது பைகளை வைத்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்.

லிண்டா ரப்பர் கையுறைகளை உற்பத்தி செய்யும் ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை செய்தாள்.  

ரப்பர் மரப்பாலை கை வடிவத்தில் உறையச்செய்வதற்கு முன்பு, அப்பாலை சுத்தீகரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. தரமான கையுறைகளை உற்பத்தி செய்வதற்கு, முதலில் வேலை செய்யும் இடம் சுத்தமாக இருத்தல் அவசியம். அது தூசிகளும் துரும்புகளும் மரப்பாலில் விழும் வாய்ப்பை தவிர்க்கத்தான். இல்லையெனில் கையுறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இறுதி தயாரிப்பை பாதிக்கும். முதலில், பால் அமிலத்தில் ஊறவைக்கப்படவேண்டும், பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவப்படவேண்டும். அடுத்து அமிலத்தை நடுநிலையாக்க, காரத்தில் ஊறவைத்து மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவப்பட வேண்டும். கடைசியாக, ரப்பர் கையுறைகளில் நுண்துளைகளை அகற்றும் நோக்கத்திற்காக பாலின் மேற்பரப்பு சீரானதாக இருப்பதை உறுதி செய்ய அதை துலக்கவேண்டும். பாலில் தூசியோ துரும்போ இருந்தால், உற்பத்தியாளர் ரப்பர்  கையுறைகளின் முழு தொகுப்பையும் குப்பைக்கு தள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். இந்த காரணத்தினால்தான் ரப்பர் பால் திரவங்களால் நனைக்கப்படும் முன்பு தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ஆய்வுசெய்யப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது.

மரப்பாலை சுத்தப்படுத்தும் துறையில்தான் லிண்டா ஆறு வருடங்களாக வேலை செய்கிறாள். லெவி, இருப்பு வாடைகள் எல்லாம் போக மாதம் ஆயிரத்து ஐநூறு ரிங்கிட் வரையில் சம்பாதிக்கிறாள். மதிய உணவு வேளைக்காண மணி ஒலிக்கப்பட்டது. லிண்டா கழிப்பறைக்கு சென்று கைகளை எல்லாம் கழுவி முகம் அலம்பிவிட்டு வெளியே வந்தாள். தேவி அவளுக்காக வெளியே கையில் பையோடு காத்திருந்தாள். லிண்டாவை பார்த்ததும், "ஹேய், வா போகலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ஆமா, ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்க?" 

இருவரும் நடந்துகொண்டே தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்கள். அதற்குள்ளாகவே லிண்டா நேற்று லிசா மேடம் வீட்டில் நிகழ்ந்ததை எல்லாம் சொல்லிவிட்டிருந்தாள். வெளியில் ஒரு உணவகத்தில் நுழைந்தார்கள். "உனக்கு ஆரம்பத்திலே சொல்லிருக்கேன். இப்படி அமினாவை அடிக்கடி போய் பார்ப்பது நல்லதில்லை, ரிஸ்க்னு. நீதான் கேக்கமாட்டீங்கிற" என்றாள் தேவி. உணவகத்தின் ஒரு ஓரத்தில் காலியாக இருந்த ஒரு மேஜையில் தோழிகள் அமர்ந்தார்கள். சேவகியிடம் வேண்டிய உணவை சொல்லியனுப்பினர்.

"இப்போ நான் உன் முன்னாடிதானே இருக்கேன். ஆனா என் மனசெல்லாம் அவகிட்டத்தான் இருக்கு. இத எப்படி போகவேண்டாம்னு நிறுத்த முடியும்?"

தேவி தலையை ஆட்டிக்கொண்டாள், காதில் அணிந்திருந்த புதிய தோடுகள் ஆடின. வெளியில் நடப்பட்டிருந்த பூச்செடிகளை பார்த்துக்கொண்டே, "பேசாம, உனக்குன்னு ஒரு பிள்ளைய பெத்துக்கோயேன். உனக்கு ஒரு டைவெர்ஸன்-ஆ இருக்கும்."

"சாத்தியமில்ல..." என்றாள் லிண்டா.

"அதெல்லாம் முடியும், யோசிச்சுப்பார். உனக்கு வேறென்ன கவலை. உன் குடும்பம்... ஓ யெஸ், ஒரு விஷயம் இன்னும் சொல்லலைல?" என நெற்றி நெரிய வினவினாள் தேவி.

"என்ன?" 

"உன் தம்பி இங்க வாரான். உன்ன பாக்க."

"ஏன்? முகவரி எப்படி கிடைச்சது? யார் சொன்னா?" என கணைகளை தொடுத்தாள், இறுகிய முகத்துடன்.

"அட பொறுமையா கேளும்மா. நம்மள கொண்டுவந்தாங்கல்ல ஏஜென்ட் அவர்கிட்டதான் உன் தம்பி எப்படியோ கண்டுபுடிச்சு கேட்டிருக்கான். அவரு எனக்கு கால் பண்ணி கேட்டாரு. நான்தான் அட்ரஸ் கொடுத்தேன்..."

"தேவி, நான் அவங்க யாரும் வேண்டாம்னுதான் இங்க வந்திருக்குறேன்னு உனக்கு தெரியாதா?"

"சொல்றத கேளு லிண்டா. எவ்வளோ தூரம்தான் ஓடப்போற? உன் தம்பிதானே, பாசமா அக்காவை பார்த்துட்டு போகலாம்னு இருப்பான்."

சொல்லியனுப்பிய உணவுகள் ஆவிபக்க வந்து சேர்ந்தன. எதோ யோசனையாகவே இருந்தாள், லிண்டா. லிண்டாவின் தற்போதைய சூழ்நிலைக்கு அவளது மனதை வேறு இடம் செலுத்த தேவிக்கு வேறு வழி தெரியவில்லை. அவளது தம்பியின் வருகை அவளுக்கு சில மாற்றங்களைத் தரும் என நம்பினாள். தம்பி வருகிறான் என சொல்லியவுடன் ஏதாவது சொல்லி சண்டையிடுவாள் என்று எதிர்பார்த்திருந்த தேவி, சற்று முன்னரான உரையாடலுக்குப் பின் நம்பிக்கை கூடியிருந்தது. "சரி சாப்பிடு, முதல்ல." என்றாள்.

"எப்போ வரான்னு சொன்ன?"

"நாளை மறுநாள்."

தொடரும்...

Comments

Popular Posts