குவளைக் காதல்! - 1

பூ திரள்கள் திரண்டு எழ அதை அள்ளி எடுத்து, விரித்து வைத்திருந்த பழைய செய்தித்தாள் மீது பரப்பப்பட்டது. காலம் காலமாக கடைபிடித்து கொண்டுவரும் வில்லேஜ்  விஞ்ஞானிகளின் உடல் நல திட்டம் அது. மஞ்சள், சிவப்பு, பச்சையென பூத்திருந்த பூந்திகளை புடைத்து கலந்து, கையில் எடுத்து உருட்டப்பட்டது.

கல்லாப்பெட்டி மேஜையின் மீது வைத்திருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுகொண்டு நேரே சமையலறை நோக்கி வந்தார் தர்மா என்ற தர்மலிங்கம். தன் பெரிய மீசையை நீவிக்கொண்டே சமயலறையில் சுற்றிக் கொண்டு "என்னப்பா... அய்யாக்கண்ணு மகன் கல்யாணத்துக்கு பலகாரம் எல்லாம் தயாராச்சா? இன்னைக்கு என்னன்னே தெரியல கஸ்டமரையே காணோம், வானம் வேற கருத்துகிடக்கு. இந்த ஒரு ஆர்டரா நல்ல பண்ணி குடுங்கய்யா. கடைக்கு கஸ்டமரை இழுத்துட்டு வரணும் நம்ம பலகாரம், என்ன?" என்றார் தர்மா. அறையின் மூலையில் அடுப்பில் கொதித்திருக்கொண்டிருந்த மீன் குழம்பின்  வாசனையால் இழுக்கப்பட்டவர், கரண்டியால் சற்று கிண்டி பார்த்தார்.

கரிச்சான்பட்டியில் ஆனந்தம் ஹோட்டல் என்றால் நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். தர்மலிங்கத்தின் அப்பா ஆனந்தராஜ் துவங்கிய ஹோட்டல்,  கரிசிச்சான்பட்டியிலேயே முதல் ஹோட்டல். என்ன கேட்டாலும் கிடைக்கும் அக்ஷயபாத்திரம், ஆனந்தம் ஹோட்டல். அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் பெண்களுக்கு கர்ப்பகால பிரத்யேக கஷாயம் முதல் கைக்குழந்தைகளுக்கு பசும்பால் வரை இலவசம். இதற்க்கு ஒரு காரணமும் உண்டு. தர்மலிங்கம் பிறக்கையிலேயே தாயை தொலைத்தவர். தன் தந்தை தனக்கொரு அன்னையாகவும் இருக்க சிரமப்பட்டதை கண்டிருக்கையில் இனி மற்றவரை அப்படி சிரமப்பட விடக்கூடாதென ஒரு லட்சியம் அவருக்கு. செய்யும் வேலை என்றுமே தரமாக இருக்கவேண்டுமென்பது அவரது கொள்கை. இந்த கொள்கையினாலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார் தர்மலிங்கம்.


செவுற்றில் நிறுவப்பட்ட அலமாரியில், மசாலாக்கள் போதுமான அளவு இருக்கிறதா என பார்த்துக்கொண்டு நடந்தார். நாற்பது வயது நரையை கோதிவிட்டபடி, "என்னப்பா அம்மாக்கு உடம்பு எப்படி இருக்கு?" என தன் சமையல்காரரை கேட்டுக் கொண்டார். வேஷ்டியை தூக்கி மேலே கட்டி, கையை அலம்பிவிட்டு கொஞ்சம் பூந்திகளை கையில் அள்ளிக்கொண்டார் தர்மா. கண்ணில் ஒற்றிவிட்டு வாயில் போட்டு மென்றவரின் கண்கள் சுருங்கின, "என்னைய இவ்வளோ இனிப்பு போட்டிருக்கீங்க? இவ்வளோ இனிப்பு சாப்பிட்டா, சாப்பிடறவன் உடம்பு என்னத்துக்கு ஆகுறது? இன்னைக்கு கடைக்கும் இதே லட்டுதானா?" என்றார்.

"இல்லைங்கண்னே, கடைக்கு இன்னும் பலகாரம் செய்யல. இது கல்யாணத்துக்கு" என்றான் லட்டு பிடித்து கொண்டிருந்த புதுப் பையன்.

"என்னையா நீ, ஒரு அளவு வேண்டாமா? கடைக்கு செய்யறப்போ சொல்லு என்ன? நானே போடுறேன். நல்ல விஷயத்துக்கு போகுது, கொஞ்சம் அதிகம் சீனி சாப்பிட்டா  பரவால்லை."

"சரிங்க அண்ணே!"

அலம்பிய கையை தோள் துண்டில் துடைத்துக் கொண்டே வெளியில் சென்ற தர்மலிங்கம், கடையில் இருவர் வந்திருப்பதை கண்டார். ஜன்னலருகே அமர்ந்திருந்தவர்களை சற்று கவனித்த போது, அட... தெரிந்தவர்கள்தான்.

"எப்படி இருக்கீங்க புள்ளைகளா? டேய் ஆவி...  சாப்பிட என்ன வேணும்னு கேட்டியாடா?" விசாரித்தார் தர்மலிங்கம்.

வந்திருப்பவர்கள் பதிலுரைப்பதற்குள், பின்னாலிருந்து ஆவி, "இதோ ரெடியா ஆயிட்டு இருக்குண்ணே!" என்றான். ஆவிபறக்க டீ போடும் மாஸ்டருக்குத்தான் ஆவி என்ற செல்லப் பெயர்.

"நல்ல இருக்கோம் அண்ணா!" என்றனர் வந்திருந்தவர்கள், முகத்தை முரணாக வைத்துக்கொண்டு.

மிதந்து வந்த ஆவி, சுட சுட  இரண்டு தேநீர் கோப்பைகளை மேஜைமீது வைத்துவிட்டுச் சென்றான். "சாப்பிடுங்கப்பா!" என்று தர்மலிங்கம் கல்லாவிற்குச் சென்று அமர்ந்துக் கொண்டார்.

அங்கு நிலவிய மௌனத்தில் தாண்டவம் ஆடியது தேநீர் ஆவி.

அளப்போம்...

Comments

  1. முதல் மூன்று வரி லட்டு வருணனையிலே லட்டுவை ருசித்த இனிப்பை உணரமுடிகிறது.
    தரமான ஹோட்டல், நியாயமான முதலாளி, சுறுசுறுப்பாக கடைப்பையன் 'ஆவி' ��
    அளவான வார்த்தைகளில் கச்சித ஆரம்பம். ��������

    ReplyDelete
  2. Hahaha what a way to start a story Jik 👌👌👌👌💐💐


    Characterization and explanation is simply superb 👍👍😊😊

    Best wishes 💐💐

    ReplyDelete
  3. தொழில் நேர்த்தி, மனிதாபிமானம், வியாபார தர்மம் , வாடிக்கையாளர்கள் உச்சரிப்பு என அனைத்து விசயங்களையும் காட்ட உங்களால்தான் முடியும்.

    ReplyDelete

Post a Comment