குவளைக் காதல்! - 2
இரு ஜோடி கண்கள், ஆனந்தம் ஹோட்டலில் முன்னால் வைக்கப்பட்ட தேநீர் கோப்பைகளை பார்த்துக்
கொண்டிருந்தன. சிந்தனை வேறு எங்கோ. ஹோட்டலின் கிழக்கு மூலையில் அமர்ந்திருந்த ஒரு
ஜோடியில் அந்த பெண் அணிந்திருந்த வெள்ளை சுடிதார் அந்த மூலைக்கே வெளிச்சம் தந்தது.
"அண்ணே... இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க!" அடுக்களையிலிருந்து யாரோ
அழைத்ததன் பேரில் தர்மா எழுந்து சென்றார். சரத்கால காற்று நீண்டு நெழிந்த
கூந்தலை முகத்தினில் படர விட்டது. கோகிலாவை சிந்தனையிலிருந்து மீட்டெடுக்கும்
முயற்சியில் தோற்றது. இரண்டாம் ஆண்டு இசைக்கல்லூரி மாணவி கோகிலா. பெற்றோர்களின்
அளப்பரிய பாசத்தினால் கூட்டுக் கிளியாய் வாழ்ந்தவள். அவர்களின் திருப்திக்காக பல
ஆசைகளைப் புதைத்தவள். ஆறு மாதத்திற்கு முன்னால் கல்லூரி கல்ச்சுரசில்தான் ராமோடு
அசாதாரணமான நட்பு உண்டானது. ஏனெனில், அந்த நட்பு எல்லா மூலைகளிலும் நட்பாக
இல்லை. சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தாலும் அவள் நினைத்தது போல அவன் பேச்சில்
சலிப்புத் தட்டவைத்ததில்லை. நல்ல ரசமாக பேச வல்லவன், ஆனால்
அதிகம் கோபம் கொள்பவன். இதற்கிடையில் வரும் ஜூலை முதல் அவளது கல்வியை அயல்
நாட்டில் தொடர்வதாய் முடிவெடுத்திருந்தாள் கோகிலா.
எங்கிருந்தோ வந்த இடி சத்தம் இருவரையும் திடுக்கிட வைத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. முகத்தில் பரவி இருந்த மயிர்களை அப்போதுதான் உணர்ந்த கோகிலா, அதனை சரி செய்தாள்.
"ஏன் போயே தீருவேன்னு அடம் பிடிக்கிற?" என்றான் ராம். புதிதாக வெட்டிய கிராப் அவனுக்கு நன்றாக பொருந்தியிருந்தது.
தேனீர் கோப்பையை கைகளில் அனைத்துக் கொண்டு கோகிலா, "நான் ஒன்னும் அடம்பிடிக்கல. உன்னிடம் சொல்றேன் அவ்வளோதான்."
தர்மா அண்ணன் அடுக்களையிலிருந்து வெளியில் வந்தார். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தோளில் மாட்டினார். மீண்டும் கல்லாப் பெட்டியில் அமர்ந்தார்.
"அங்க எப்படி தனியா இருப்ப? குளிர் அதிகமா இருக்கும். அங்க இருக்கவங்களாம் ஸ்டெரியோடைப்ஸ். கருப்பர்களை மதிக்கமாட்டாங்க" ராமின் புருவங்கள் நெரிந்தன. கோகிலா தனது முடிவை தெரிவித்த நாளிலிருந்தே கூறிய அதே வார்த்தைகள்தான் இவை. நல்ல விஷயங்களை விட எதிர்மறையான மறுமொழிகளே அவனிடமிருந்து வந்தது.
நீளமான அந்த கண்கள் சுழன்று மீண்டும் ராமின் கண்களை தொட்டு, "இங்கிலாந்து யூனிவெர்சிடியிலிருந்து எனக்கு செர்டிபிகேட் கிடைக்கும்னா அது நல்லதுதானே. இங்க உள்ளவங்கலாம் வெளிநாட்டு அங்கீகாரத்தத்தான் பெருசா பாக்குறாங்க. இங்கேயே படிச்சுட்டு வாங்குற பட்டத்துக்கு மரியாதை கிடைச்சதுனா நான் ஏன் வெளிய போறேன்?" என்று ஹோட்டலின் வெளியே பார்த்தாள். சிலு சிலுவென மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது.
நேற்று இதை பற்றி பேசியபோது, அவனிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்ததே தவறென கோபப்பட்டு அனாதையாக விட்டுச் சென்றான் பஸ் ஸ்டாண்டில். இன்று காலை அவனது ஹாஸ்டலின் வெளியே காத்திருந்து அவனை ஆனந்தம் ஹோட்டல் அழைத்து வந்தாள். நீல நிற செக்கர் சட்டையோடு அவன் வெளி வரும்போது அவனை முதல் முறை பார்த்தது போல உணர்ந்தாள். நேற்றிருந்த கோபம் இல்லாத அவன் முகம், அவனை நேருக்கு நேர் பார்க்க வசதி செய்தது. தர்மலிங்கம் கரித்துணியை எடுத்துக்கொண்டு மேஜைகளை துடைக்க ஆரம்பித்தார்.
"யாரவது உன்னைய கேலி பண்ணிட்டாங்கன்னா உடனே கவலை படுவ. நல்ல சமையல் பன்றவளும் இல்ல நீ. அங்க போய் சாப்பாட்டுக்கு வேற கஷ்டப்படணுமா? ஏன் தேவையில்லாம இதெல்லாம்? போகாம இருக்கிறது பெட்டெர்.." கோப்பையை எடுத்து குடித்தான் ராம்.
வானத்தை பார்த்துக் கொண்டே, "கவலைப்படாத உன்ட புலம்பமாட்டேன். ஒரு தடவையாவது என் வாழ்க்கையில சொந்தமா ஏதாவது பண்ணனும்னு நினைக்குறேன். அங்க போன எனக்கு ஒரு ஸ்பேஸ் கிடைக்கும்னு நம்புறேன்."
"அப்படினா உன் பிரச்சனையெல்லாம் விட்டுட்டு ஓடுறியா, அதை சந்திக்காம? எனக்கு என்னமோ நீ அவசரப்பட்டு முடிவெடுக்குற போலத்தான் இருக்கு. உன் மேல உள்ள அக்கறையிலதான் சொல்றேன். நீ போனா நல்லதுதான் பட் போகாம இங்கேயே ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ணனா அது இன்னும் பெட்டெர்."
கோபமாக திரும்பி, "உண்மையிலேயே என் வளர்ச்சி உனக்கு சந்தோசம்னா நீ பண்றதுக்கு பேர் அக்கறைனு சொல்லாத! பத்திகிட்டு வருது!" அவளது கத்தி மூக்கினால் குத்தினாற்ற போல் உணர்ந்தான் ராம்.
"ஹே ஏன் தப்பாவே புரிஞ்சுகிற. நான் உன்னைய போகவேண்டாம்னு சொல்லலியே. அவசர
படுறியோன்னு தோணுச்சு சொன்னேன். இங்கேயே இருந்தா எனக்கு கொஞ்சம் சந்தோசமா
இருக்கும்" என சுற்றி வளைத்து அங்கேயே வந்து நின்றான் ராம்.
"ஸோ... உன் சந்தோஷத்துக்காக நான் இங்கேயே கிடக்கணுமா? யார் யாரை சந்தோச படுத்த, திருப்தி படுத்த நான் வாழணும்னு லிஸ்ட் எழுதி கொடு, உங்களுக்கெல்லாம் அடிமையா இருந்தே நான் சாகுறேன். என் லைஃப்ல நானா எந்த முடிவும் எடுக்க கூடாதா? எல்லாமே இன்னொருத்தருக்காக, இன்னொருத்தர் சந்தோஷத்துக்காக, இன்னொருத்தர் கேட்டுத்தான் முடிவெடுக்கணுமா? எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கிறதுக்கு நான் என்ன அடிமையா பொறந்தேனா?" பெருமூச்செறிந்தாள் கோகிலா. தன்னை அறியாமல் சத்தமாக பேசிவிட்டிருக்கிறாள் என மௌனமாய் இருந்த ராமின் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது.
மேஜைகளை துடைத்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் தன்னை நோக்கி வருவதை பார்த்தாள் கோகிலா. வரும்போதே, "டேய், அந்த லட்டை எடுத்துட்டு வா!" என்று சொல்லிவிட்டு, "என்னமா கோகிலா பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்ட?" என்றார்.
கோகிலா தலைகுனிந்தாள்.
ராமின் தோள் மேல் கைவைத்து, "மன்னிச்சுக்கோங்க புள்ளைகளா நீங்க பேசிட்டு இருந்தது காதுல விழுந்தது. ராம் தம்பி, உனக்கு அவ மேல பாசம்ங்கிறது புரியுது பா, அவளுக்கும் இருக்குனு புரிஞ்சுக்கோ. அவளுக்கும் கஷ்டமாத்தான் இருக்கும், அதெல்லாம் யோசிச்ச பிறகும் அவ உன்கிட்ட சொல்றான்னா அவளோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னு எவ்வளோ உறுதியோடு இருக்கானு பாருப்பா. உன்னோட நிகழ்கால சந்தோஷத்துக்காக உன் அபிப்பிராயத்தை சொல்லி அவளை மனசளவுல முடக்கினா எப்படி?" என்றார். கோகிலா ராமை நோக்கினாள். ராம் எதுவும் சொல்லவில்லை.
"சண்டை போட்டுக்காதிங்க புள்ளைகளா.." என சொல்லிக் கொண்டிருக்கும் போது, தர்மலிங்கம் கேட்ட லட்டுக்கள் வந்து சேர்ந்தன சிறு கிண்ணங்களில், "... எடுத்துக்கோங்க தம்பி, சாப்பிடுமா கண்ணு" என்றார் அன்பாக.
"இல்ல அண்ணா, ரொம்ப இனிப்பா இருக்கும்..." என தயங்கினாள்.
தர்மலிங்கம் சிரித்து, "இல்லையம்மா, இன்னைக்கு
நானே என் கையாள சக்கரை சேர்த்தேன். இனிப்பு அளவா இருக்கும். பாசமோ கோபமோ, வாழ்க்கையில எதுவுமே அளவா இருந்த சந்தோசம்தான் அம்மா. சரி சரி தண்ணி வேற
ஆறிடுச்சு பாருங்க. டேய் ஆவி!" என கோப்பைகளை அவரே எடுத்துச் சென்றார்.
அவர் போன சில நிமிடங்களிலேயே ஆவி பறந்து வந்து புது தேநீரை வைத்து விட்டுச் சென்றது. மீண்டும் இடி ஓசை.
இரு ஜோடி விழிகள் ஒன்றை ஒன்று
பார்த்தன. இரண்டிலும் வருத்தத்தின் சாயலே படர்ந்திருந்தது. சிறு மௌனத்திற்கு பின், தேநீர் கோப்பையின் வெதுவெதுப்பு கைகளுக்கிடையில் பரவியது.



Comments
Post a Comment