களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 1: வழி மாறிய பயணம் - 1


இருபுறமும் இயற்கை படர்ந்திருந்த நெடுஞ்சாலை. காலையில் பெய்த மழையின் காரணமாக எங்கும் பனி மூட்டமாகவே தெரிந்தது. பனியின் ஊடே வந்த வெளிச்சத்தால் மரங்கள் நிறைந்த அந்த சாலை தெளிவாகவே தெரிந்தது.  இலையுதிர்காலம் வருவதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பினும் சில மரங்கள் அதற்குள்ளாகவே இலைகளை உதிர்க்க ஆரம்பித்திருந்தன.

ஆனால் இயற்கையை ரசிக்க நேரமில்லாமல் அந்த மனித புழக்கமில்லா இடத்தில் தனியே ஒரு Jaguar E-Pace வகை வாகனம் பறந்து கொண்டிருந்தது. சூரியன் மறைய இன்னும் 20 நிமிடங்கள் எஞ்சி இருக்க, ஒரு மணி நேரத்திற்கு 120 km வேகத்தில் கடந்த அந்த வாகனத்தில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏதோ வாக்குவாதம்.

அடுத்த 30 வினாடிகளில் அந்த E-Pace, piece piece ஆனது. சாலை ஓரம் இருந்த பெரும் பாறை ஒன்றில் மோதி தூக்கி வீசப்பட்டு மண்ணில் விழுந்து புரண்டு சென்றது வாகனம். சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தால் சாய்வாக நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து வலியின் முனகல்கள் ஒலித்தன.

நசுங்கிய வலதுபக்க கதவை திறந்துகொண்டு ஒரு பெண் தொப்பென மண்ணில் விழுந்தாள். மூச்சிரைத்தாள். கைகளை பின்னால் ஊன்றி சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தாள். பின் கண்களை திறந்து சுற்றும் முற்றும் நோக்கி, சட்டென எழுந்து ஓட்டுனரின் இருக்கை பட்டையை அவிழ்த்து விட்டாள். சுயநினைவின்றி இருந்த அந்த ஆடவன் அவள் மேல் விழ, அவனது எடையை சுமக்க முடியாமல் தடுமாறி விழுந்தாள். தன் மீது அழுந்தி இருந்த அவனை புறம் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். தன்னை தள்ளிவிட்டதில் கோபமடைந்து அவனை உதைத்தாள். பின் அவன் முன்பே காயமுற்றிருப்பதை பார்த்து வாய் பொத்தி, 'Sorry sorry' என்று முணுமுணுத்தாள்.

ஏதோ ஞாபகம் வந்தவளாக நெடுஞ்சாலையின் திசையை நோக்கிவிட்டு, ஆடவனின் காற்சட்டை பையை துழாவினாள். தேடியது கிடைக்காமல் மீண்டும் வாகனத்தினுள் நுழைந்து இடுக்குகளில் தேடினாள். நீண்ட குழலை பின்னால் கட்டி கொண்டையிட்டுக் கொண்டாள். பின்னிருக்கையின் கீழே கைவிட தட்டுப்பட்டதை பிடித்துக்கொண்டு பெருமூச்சு விட்டாள். அதை எடுத்து தன் jean  பையில் போட்டுக் கொண்டாள்.

பின்னர் அந்த ஆடவனின் கையை ஒரு தோளில் போட்டுகொண்டு கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு நடந்தாள். நெடுஞ்சாலையை நோக்கி வராமலும் வனத்திற்குள் வெகு தூரம் செல்லாமலும் சாலையின் அருகே மறைந்தாற்போல் சென்று கொண்டிருந்தாள். ஏற்கனவே விபத்தால் சோர்வுற்றிருந்த அவளால் 30 நிமிடங்களுக்கு மேல் நடக்க முடியவில்லை. சக்தியினை வரவழைத்துக் கொண்டு சற்று தள்ளி விரிந்திருந்த ஒரு தடாகத்தை நோக்கி நடந்தாள். கண்கள் சுற்றிக்கொண்டு வந்தது. அங்கும் இங்குமாய் ஆடி பின் மண்ணில் விழுந்தாள்.

அந்த நொடியில் நூறு மைல் தொலைவில் ஒரு கைப்பேசி அலறியது. அழைப்பை எடுத்தவுடன், "என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. அந்த chain என்னிடம் வந்தாகணும். அவனை உயிரோட கொண்டுவாங்க கூட இருக்குறவளுக்கு விஷயம் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சிருந்தா அவளை கொன்னுடுங்க" என்றது ஒரு அதிகாரக் குரல்.

களவாடப்படும்...

Comments