களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 5: எதிரொலி - 2

'முன்னாடியே சொல்லிருக்கணும் நீ' என முகத்தை திருப்பிக் கொண்டாள் லீலா. 

'சரிம்மா, அதான் sorry சொன்னேன்ல. வேற என்ன பண்ண சொல்ற?' என கதவை திறந்து உள்ளே சென்றான். 

அந்த பாழடைந்த வீட்டில் எதோ ஒரு அழகு குடிகொண்டதாகப் பட்டது லீலாவுக்கு. சுவற்றில் தொங்கிய புகைப்படங்களை பார்த்துக்கொண்டே நடந்தாள். தன் தாத்தா அமெரிக்காவிற்கு முதல்முறை வந்தபொழுது எடுத்த படம், தாத்தா பாட்டியின் திருமண புகைப்படம், அவர் கம்மியராக வேலை செய்தபொழுது எடுக்கப்பட்ட படம் என நிறைய நினைவுகள் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அவைகளை ரசித்தபடியே மாடிப்படிகளில் ஏறினாள் லீலா. 

தான் யாரென்று அறிமுகம் செய்தபொழுது அவளது முகத்தில் தென்பட்ட ஆச்சரியத்தை ரசித்தான் சஞ்சய். அது ஒரு பழக்கம் அவனுக்கு. எவரிடமும் தன்னை முழுமையாக அறிமுகப்படுத்திக்கொள்வதே இல்லை. மனிதர்களின் முகபாவனைகளை கவனிப்பது அவனது தொழிலுக்கு உதவுகின்ற அம்சமாகினும், லீலாவின் முகபாவனை எவ்வாறு இருக்கும் என அறிய அவளை சந்தித்த நாள்முதலே பெரிதும் எதிர்பார்த்திருந்தான். ஒரு மெல்லிய புன்னகையுடன் சாரளத்தை விட்டு நகர்ந்தான். அருகில் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படம் புன்னகையை பெரிதாக்கியது. அவளேதான். குறும்புத்தனமான அதே சிரிப்பு. தாத்தாவின் மடியில் ஜம்மென்று அமர்ந்த மகிழ்ச்சி அது.



மாடியில் ஓர் அறையில் இருந்த அலமாரியை தூர்வாறிக்கொண்டிருந்தான் விக்கி. எந்த பெட்டியும் கிடைக்காதது கண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தான், அகிலன் அவனது வாயைப் பொத்தினான். யாரோ வருகிறார்கள் என சைகை காட்டினான். விக்கியும் அகிலனும் அந்த அறையின் வாசலுக்கு அருகில் காத்திருந்தனர். 

ஒவ்வொரு அறையாக பார்த்துவிட்டு படிகளில் ஏறினான். படியின் இறுதியில் கீழே பார்த்த அதே புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அவன் கண்கள் பெரிதாகிய அந்த நொடி துப்பாக்கியின் வெடிச்சத்தம் அந்த வீடுமுழுவதும் எதிரொலித்தது. "மரியாதையா அந்த பத்திரத்தை கொடுத்திடு சஞ்சய்! உன் லீலா இப்போ என்கிட்டத்தான் இருக்கா..." என்று மெல்ல ஒரு அறையிலிருந்து வெளிவந்தவர்களை பார்த்தான், சஞ்சய். லீலாவை பார்ப்பதை தவிர்த்தான். அவள் அவன் பிடியில் இருப்பது மனதின் எதோ ஒரு மூலையில் அரித்துக்கொண்டிருந்தது. நல்லவேளை அவள் கத்தி கூச்சலிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். உணர்வுகளால் ஆட்கொள்ளப்படக்கூடாது என சஞ்சய் எதிரியின் கண்களை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.

"சாவியத்தான் எடுத்துகிட்டயே...? ஒரு அறிவாளியா இருந்திருந்தா இந்நேரம் கண்டுபுடிச்சிருக்கணும் நீ"

"அந்த பெட்டியை பார்த்த பிறகுதான் சொல்றேன். ஏற்கனவே இங்க வந்து அந்த பத்திரத்தை எடுத்துட்டு போயிருக்க. மரியாதையா கொடுத்துடு சஞ்சய்" என்றான் அகிலன். 

முதலில் லீலாவுக்கு இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என புரியவில்லை. ஆனால், அகிலன் எதை கோருகிறான் என்று விளங்கியவுடன் தன் நிலைப்பாட்டை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள்.

"உன்னால தேட முடியலைன்னா கிளம்பலாம். எனக்கு தேவையானதை நானே கண்டுபுடிச்சிக்கிறேன்." 

"பத்ரம் கிடைக்காம நாங்க கிளம்புறதா இல்ல."

"நாங்க..??"

"உனக்கு பின்னாடி தாண்டா நிக்கிறேன்!" 

சஞ்சய் திரும்பி பார்த்தான், கலகல வென சிரித்தான். "ஒரு துப்பாக்கிக்கே துப்பாக்கிய குடுத்திருக்கிங்க..?"

லீலா அவனை ஒரு பைத்தியக்காரனைப்போல பார்த்தாள். 'சுயநினைவுடன்தான் இருக்கிறானா. என்ன செய்கிறான்?' ஏற்கனவே நிகழும் எதுவும் அவளுக்கு புரியாததாக இருந்தது, இப்பொழுது புது குழப்பம் வேறு சேர்ந்துகொண்டது. தன்னை பிணை கைதியாக பிடித்திருப்பவன் தனக்கு ஒரு காலத்தில் உறவானவன் என்பதை அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. 

லீலா தன்னை மறந்தபடி கடந்த கால நினைவலைகளில் நடந்துக் கொண்டிருந்தாள். சற்று காலமே அவள் அந்த வீட்டில் கழித்திருந்தாலும், சில இனிய நினைவுகள் மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தன. தான் ஓடி பிடித்து விளையாடிய அறையை சுற்றி நோக்கினாள். அங்கிருந்த படுக்கையை ஸ்பரிசத்தாள். புன்னகைத்தாள். பின் விழாக்காலங்களில் கிழக்கு வராண்டாவில் உட்கார்ந்துக் கொண்டு வானவேடிக்கை பார்த்ததையெல்லாம் நினைவுகூறினாள். பாட்டியும் தாத்தாவும் செல்ல சண்டைகள் போட்டதும் அங்குதான், தாத்தா கால்களை பிடித்துவிட பாட்டி கதை சொல்லக்கேட்டதும் அங்குதான். எவ்வளவு இனிமையான நாட்கள் அவை. தாத்தா அடிக்கடி பாடும் ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே நடந்தாள். அந்த பாடல் அகிலனின் செவிகளை எட்டியது. 

திடுக்கிட்டான் அகிலன், 'மனோ?'  

என்றைக்கும் இல்லாத படபடப்பு ஒன்று அவனது உடலில் ஏறியது. விக்கியிடம் கண்களால் 'தாயாராக இரு' என்றான். சில நிமிடங்களில் லீலா துள்ளிக்குதித்து அந்த அறையிலிருந்த சாய்வுநாற்காலியை நோக்கி ஓடிவந்தாள். மகிழ்ச்சியாக அதை தடவிக்கொடுத்தாள். விக்கி அறையின் கதவை மூடிய சத்தம் கேட்டு திரும்பினாள். அவள் விக்கியைத்தான் முதலில் பார்த்தாள். விக்கி அவள் முகத்தை பார்த்து கூச்சலிடப்போகிறாளோ என துப்பாக்கியுடன் முன்னேறினான். ஆனால், அவள் அகிலனை பார்த்து உறைந்து நின்றிருந்தாள்.  
  
விக்கி கோபம் கொண்ட முகத்துடன்,  "சிரிச்சது போதும், சுட்டுடுவேன்" என்றான்.

"Brother, அதுக்கு ஏன் பின்னாடி நிக்கிறீங்க முன்னாடி வந்து துப்பாக்கிய காட்டுங்க. எப்படி சுடணும்னு தெரியும்ல?" நக்கலாக சொல்லி, "வேற யாரவது இருக்காங்களா?" என்று அகிலனை பார்த்துக் கேட்டான் சஞ்சய். 

"பேசினது போதும், வேலைய பார்ப்போமா..." லீலாவை நெருக்கி  துப்பாக்கியை தயாராக்கினான். 

"Idiot! வலிக்குது" என்றாள். 

"நாம சேர்ந்து வேலை பாக்கபோறோமா? ஆகறதில்லை. நா முன்னாடியே எடுத்திருந்தா ஏன் இங்க வரப்போறேன்? நா வேணும்னா இங்க wait பண்றேன். தேடி பாருங்க. கிடைச்ச எடுத்துட்டு போங்க" என்று கூடத்தில் இருந்த ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். 

"அண்ணே, என்ன திமிரு பாத்தீங்களா? எவ்வளோ ஏத்தம் இருந்தா post-moterm பண்ற நேரத்துல pose கொடுப்பான்" என்றான் விக்கி.

லீலாவை முன்னாள் தள்ளிக்கொண்டு, "ஹேய், என்ன விளையாடுறியா? இவ உனக்கு உயிரோட வேணும்ல? நீ cooperate பண்ணலைன்னா இவளை.."

முகத்தை ஒரு மாதிரி சாய்த்து, "கொல்லமாடீங்க, அகிலன்! கூடவே விளையாடி வளர்ந்த லீலா மனோஹரிய ஒரே நொடியில சுட்டுத்தள்ளுற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா என்ன?" 

அகிலன் மிரண்டு போனான், "என் பேரு...."

சஞ்சய் புன்னகைத்தது அகிலனை இன்னும் காயப்படுத்தியது. ஆம், மனோவை சுட்டுக்கொல்லும் தைரியம் அவனுக்கு இல்லைதான். அவள் தன்னை பார்த்து சில நொடி மெளனமாக இருந்தாளே? அப்போதுகூட அவனது திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தன்னை நினைவுகொண்டு, 'அக்கி?' என்று சொன்ன ஒரு சொல் அவனது மிச்சம் மீதியிருந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டது. 

"மனோ!" பல வருடங்கள் கழித்து அந்த பெயர் அவன் உதடுகளில் உயிர்பெற்றது. அது அவனுக்கு ஒரு தித்திப்பை கொடுத்தது.

"அண்ணே, இவங்களுக்கு உங்கள முன்னாடியே தெரியுமா?" என்ற கேள்விக்கு பதில் வராததால் விக்கி அறையிலிருந்து வெளியேறினான்.

மனோவின் பால்ய பருவ முகத்தை மட்டுமே அறிந்த அகிலன், இன்று அது எவ்வளவு அழகாக பரிணமித்திருப்பதைக் கண்டு நெகிழ்ந்தான். சிறுவயதில் தன் தாத்தாவின் பிரிவை சகித்துக்கொள்ளமுடியாமல் வீட்டுக்கு வெளியே வருத்தத்தில் அமர்ந்திருந்தவனை ஒருநாள்  கைபிடித்து அழைத்து சென்றது இந்த தேவதைதான். இவளே தன் தாத்தா அவனுக்கும் தாத்தாதான் என்று கூறியவள். அவளது வீட்டில் அவளோடு விளையாடிய நாட்களில் அவள் ஒரு நல்ல சினேகியாகத்தான் இருந்தாள். ஆனால், அந்த உறவு பிற்காலத்தில் அவன் தனிமையில் வாழ நேர்கையில் சற்று மாறியது. நிலைவிலுள்ளவள் திரும்ப வரமாட்டாள் எனும் தைரியத்தில் தன் காதலையெல்லாம் அவள் மீது கொட்டினான். அவளை தனது வாழ்க்கையில் அன்பின் ஆதாரமாக்கினான்.

அவனது குரல் முதலில் ஒரு மலர்ச்சியை கொடுத்தாலும், லீலா மகிழ்ச்சி அடையமுடியாதபடி செய்தது அவன் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறான் என்ற உண்மையும் அவன் கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியும்தான். "இங்க என்ன பண்ற அகிலா?" 

"நா..." என்று சொல்லடுக்கும் பொழுது படிகளில் யாரோ ஏறும் சத்தம் கேட்டு மனோவை நோக்கி வந்தான். அவள் பின்னால் நின்று அணைத்துக்கொண்டு துப்பாக்கியை மேல்நோக்கி சுட்டான். இன்று நடக்கவிருப்பது என்னவென்று அவனால் சற்றும் யூகிக்க முடியவில்லை. ஆனால், மனோவுக்கும் தனக்கும் மற்றொரு பிரிவு வந்துவிடலாகாதென மனதில் வேண்டிக்கொண்டான். 

களவாடப்படும்...

Comments