களவாடிய பொழுதுகள்!

அத்தியாயம் 6: மரணப் பறவைகள் - 1

"இந்த வீடுவரை தனியா தேடி வரத்தெரிஞ்சவனுக்கு இங்க இருந்தவங்கள பத்தி தெரிஞ்சிருக்க மாட்டேனா, அகிலன்?" கைகளை உயர நீட்டி நெட்டி முறித்தான்.

'ஆம்' அதுமட்டுமல்லாது மனோவிற்கு வலித்தபோது தன் அணைப்பு சற்று தளர்ந்ததையும் கவனித்திருப்பான். தெரிந்திருக்கும் தன் பலவீனம். சஞ்சய்யின் அக்கறையில்லா அணுகுமுறையிலிருந்து மனோவை அவன் தனக்கு எதிராக பயன்படுத்துவானா என்ற சந்தேகம் அகிலனுக்கு எழுந்தது. சஞ்சய் மனோவை தாக்குவதையோ, அல்லது மனோவை வைத்து தன்னை தாக்குவதையோ அவன் விரும்பவில்லை.

சஞ்சய்யின் நடவடிக்கையில் எரிச்சலடைந்த விக்கி, "Bro இவன போட்டுடலாம். இவனோட பேச்சே சரியில்லை. நம்மால தேடிக்கமுடியாத ஒண்ணா என்ன? இதுவரை எத்தனை caseஐ பாத்திருப்போம். சொல்லுங்க bro"

"ஆ... அதைத்தான் bro நானும் சொல்றேன்" என்றான் சஞ்சய்.

'எப்பொழுதும் தன் கண்களைத் தேடித் தேடிப் பார்க்கும் இவன், ஏன் இப்போது சற்றும் பார்க்க மறுக்கிறான்' என்று வியப்பாக இருந்தது லீலாவுக்கு. இந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஏதாவதுதொன்று செய்தாக வேண்டும். அதற்கு அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுதான் சரியான யோசனையாக தோன்றிற்று. அதை அவனிடமே கூற யத்தனித்தாள், "சஞ்சய், என்னை பாரு. கேளு, நாம இவங்களோட சேர்ந்து தேடலாம்.." முதல்முறையாக ஒரு அயலவன் தன்னை பார்ப்பதாக உணர்ந்து லீலா பேச்சை நிறுத்தினாள். அப்பொழுது அகிலனின் அலைபேசி அவனது காற்சட்டை பையில் அதிர்ந்தது. சஞ்சய்யின் பார்வையில் ஒரு அன்பு, கருணை எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்ததை கவனித்தாள் லீலா.

அவளது வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல் பேசினான், "ஓ... உங்களை ஏவியவங்களும் வராங்கனு சொல்லவே இல்லையே, Mr. அகிலன்" என்றான் சஞ்சய் ஒரு ஓரப்புன்னகையுடன்.

'ஓ இதையும் அறிந்தானா? நன்கு படித்திருக்கிறான் தன் எதிரியை' என்று யோசித்தான் அகிலன். அவன் தன்னை வென்று கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்தபோது புருவங்கள் நெரிந்தது, "உன்னோட கடைசி வாய்ப்பு, நீ இனி சொல்லப்போற வார்த்தைலதான் இருக்கு சஞ்சய்! "

விக்கி எந்நேரத்திலும் சஞ்சய்யை சுட்டுவிடும் நோக்கில் துப்பாக்கியை தூக்கிப் பிடித்திருந்தான். அந்த கூடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது. சஞ்சய் ஒரு அசைவுமின்றி அகிலனின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தைரியம் லீலாவிற்கு ஒரு செய்தியை நினைவுபடுத்தியது.

"நல்லவேளை ஒரு carpet இருந்தது மாருதியில" என்றான் சஞ்சய் இடையில் வலியோடு நடந்துக்கொண்டு.

முன்னால் சாலையைப் பார்த்துக்கொண்டே "இல்லைனா நாம தப்பிக்க முடியாதா? அவனுங்கள அடிச்சுப்போட்டு நாம எப்பவோ தப்பிருக்கலாம்."

"அவனுங்கள கூட்டமா பிடிக்கணும்ல்ல, அதனாலதான் அவனுங்க போக்குல போறோம்." கைத்தாங்கலாக பிடித்திருந்த லீலா அவனை முறைத்துப் பார்த்தாள். சஞ்சய் சிறுபிள்ளைப்போல புன்னகைத்து "ஒரு பிரச்சனையோட solution அதுகூடவே பிறக்கும்னு சொல்லுவாங்கல்ல. அதுனால அது நம்ம கண்ணுமுன்னாடியே தெரியணும்னு அவசியம் இல்ல. அது நமக்கு பின்னாடி தெரியாமலும் இருக்கலாம். அந்த solution பிரச்சனைக்கு முன்னாடியே பிறந்தும் இருக்கலாம்" என்றான்.

'ஆம், அந்த solution... solution எங்கருக்கு?' யோசித்தாள் லீலா. சஞ்சய் முன்னாடியே இங்கு வந்திருக்கிறான் என்றுதானே அகிலன் கூறினான். நிச்சயம் இங்கு ஏதேனும் இருக்கும். தற்போது சஞ்சய் தனக்கு அயலவனாக தோன்றினாலும் அவன் திறமையில் சந்தேகம் ஏதும் அவளுக்கு எழவில்லை. அவன் ஏதேனும் வழி வைத்திருப்பான் என்றே நம்பிக்கை கொண்டிருந்தாள். படிகளில் ஓசை எழுந்தது. *போன முறை போனப்போ அங்க மறைச்சு வச்சிருந்தேன்*


அடுத்த 30 நொடிகளில் மயானபூமி யுத்தக்களமாகியது. அகிலன் லீலாவை நெருக்கி பிடித்து மறுபுறம் திரும்பினான். பல வெடிச்சத்தத்தின் ஓசைகள் காதுகளை அறைய அகிலனோடு சேர்ந்து அவள் சுவரில் மோதினாள். அங்கிருந்த மேசையின் அடியில் கையால் துழாவினாள். அகிலன் அவரச அவரசமாக அவளது மறுகையை இழுத்துக்கொண்டு செல்ல அவள் கையில் அகப்பட்டதை பிடித்துகொண்டாள்.

வராண்டாவின் ஒரு மறைவான இடத்திற்கு லீலாவை நிற்கவைத்து படபடவென பேசினான், "பயப்படாத மனோ. உன்னை அவன் ஏமாற்றி கொண்டு வந்திருக்கான். அவன் உன்னைய use பண்ணியிருக்கான். நீ உயிரோட இருக்கணும். அவன நாங்க கொன்னு..." அவன் தன் பேச்சை முடிக்கும் முன்னே ஒரு துப்பாக்கி வெடித்தது. லீலாவின் கண்களில் தண்ணீர் கட்டியிருந்தது.

ஆனால், அந்த ஈரத்தை தன் நெஞ்சில் உணர்ந்து கீழே நோக்கினான். தன் நெஞ்சின் மத்தியிலிருந்து ரத்தம் ஊறுவதை கண்டு "மனோ?" என்றான். அவள் கையில் இருக்கும் துப்பாக்கியை அப்போதுதான் பார்த்தான் அகிலன். தனது பால்யகால அன்பு தேவதை இன்று தனது மரண தேவதையாக வந்திருப்பாள் என சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் தனது மனோ இல்லை. இவள் லீலா என்று மெய் உணருகையில் இறுதி மூச்செறிந்திருந்தான்.

அகிலன் வெட்டப்பட்ட மரத்தைப்போல லீலாவின் முன்னாள் விழுந்தான். தான் செய்திருக்கும் காரியத்தை நம்பமுடியாமல் அழுகை வந்தது லீலாவிற்கு. அப்போதும் உள்ளே வெடிச்சத்தங்கள் குறைந்தபாடில்லை. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவிடவேண்டும் போல தோன்றியது. அப்பொழுதுதான் அந்த வீட்டின் முன்னாள் பல வாகனங்கள் நிற்பதைக் கண்டாள். சஞ்சய் என்னானான் என்று அச்சம் கொண்டாள். மீண்டும் கூடத்திற்கு சென்று காணவேண்டும் என எழுந்தாள். மெதுவாக கூடத்தினுள் நுழைந்தவள் விக்கி அங்கு ரத்தவெள்ளத்தில் கிடப்பதையும், சுவர் அங்கங்கே சிதைத்திருப்பதையும் கண்டு உறைந்து நின்றாள்.

லீலா தன் கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை எடுத்த மேஜையின் மீது சாய்ந்தாள். பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தாள். 'எப்படி நால்வர் மட்டுமே இருந்த கூடம் இப்படி ரத்த பூமியாய் மாறியது? அப்படி எதிரிகள் வந்திருந்தாலும், மருதரப்பில் பதிலடிகொடுக்க யாரும் இல்லையே. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? சஞ்சய் தன்னோடுதானே இருந்தான். அதுவும் தன் கண்முன்னால் வெறுமனே அமர்ந்திருந்தான். அவன் எப்படி ஆட்களை அழைத்து வந்திருப்பான்.' கீழே ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிச்சத்தத்திற்கு இடையில் அந்த 30 நொடிகளில் என்ன நிகழ்ந்ததென சிந்தித்தாள்.

சஞ்சய்யின் கண்கள் அகிலனின் கண்களை ஊடுருவி அவனது மனோதிடத்தை தின்று கொண்டிருந்த சமயம் கீழே கதவவை திறந்துக்கொண்டு சில ஜோடி கால்கள் படிகளில் ஏறின. சரியாக துப்பாக்கியை பிடித்திருந்த முதல் மனிதன் தெரிந்தபோது, சஞ்சய்யும் திரும்பினான். பல இரும்பு சுழற்சக்கரங்கள் மின்னல் வேகத்தில் பறந்து, மேலே வந்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் கழுத்திலும் ஆழ பதிந்தது.

விக்கியின் துப்பாக்கி வெடித்தது. அலறினாள் லீலா.

களவாடப்படும்...

Comments