களவாடிய பொழுதுகள்!
அத்தியாயம் 6: மரணப் பறவைகள் – 3
களவாடப்பட்டது @
கழுத்தில் உஷ்ணம் கூடியது, பின் சட்டை நனைந்தது, உடல் இலேசானது. தன் வாழ்வில் வந்த யக்ஷிணியின் வெளிர்ந்த முகத்தை புன்னகையுடன் பார்த்துக் கொண்டான். இந்த நொடி இறுதியானதாக இருந்தால் அவள் முகம் காண்பதே ஜன்ம சாபல்யமாக இருக்கட்டும். மெல்ல வாசற்கதவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு சரிந்தான் சஞ்சய். சற்று நேரத்தில் வீட்டு கண்ணாடிகள் சடசடவென நொறுங்கி விழுந்தது. லீலா அலறுவது எங்கோ தூரத்தில், வெகு தூரத்தில் கேட்டது.
மீண்டுமொருமுறை அங்கு மயான அமைதி நிலவியது, இம்முறை சில பிணங்களோடு. லீலா படிக்கட்டிலிருந்து ஓடிவந்து சஞ்சய்யின் கன்னங்களை கைகளில் ஏந்தினாள். கண்களில் நீர் வழிய, "சஞ்சய்... சஞ்சய... கண்ணை மூடாத please..."
வெளியிலிருந்து ஷங்கர், தனது குழுவில் இருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு வேகமாக வந்தான். மண்டியிட்டமர்ந்து, "சஞ்சய்! டேய்..." என தோள்களில் தட்டினான். பின்னால் வந்த மருத்துவர், சஞ்சயின் அருகில் அமர்ந்து முதலுதவிகளை செய்தார். நெஞ்சில் மூன்றுமுறை அழுத்தியபோது, ஏதோ கனவு கண்டு அதிர்ச்சியில் எழுந்தவனைப்போல விழி திறந்தான் சஞ்சய். "ஷங்கர், bleeding ரொம்ப excessiveஆ இருக்கு. உடனே இவன hospital கொண்டு போகணும். Let's pick him up" என்றார். "சஞ்சய், கண்களை மூடாத!"
"Doctor..." என சொல்லெடுத்த லீலாவின் கவனத்தை சஞ்சய் கைகாட்டி ஈர்த்தான்.
"மேல படி கிட்ட உங்க தாத்தா கூட நீங்க எடுத்த படம் இருக்கே அதை கொண்டுவா. சீக்கிரம்." என்றான்.
"டேய், இப்போ எதுக்குடா அதெல்லாம்?" என்றான் ஷங்கர்.
"Shut up, Shankar! லீலா, நீ போ. எடுத்து வா..." வேகமாக சுவாசித்தான்.
லீலா விறு விறுவென ஓடி படிகளில் ஏறினாள். ஷங்கரும் மருத்துவரும் மற்ற வீரர்களின் உதவியோடு சஞ்சய்யை தங்கள் Jeepஇல் ஏற்றி சாய்வாக படுக்க வைத்தனர். 'சஞ்சய் எதற்கு இப்பொழுது இந்த புகைப்படத்தை கேட்கிறான்' என்ற எந்த யோசனையும் கொள்ளாமல் அவன் கேட்ட அந்த புகைப்படத்தை எடுத்து வந்தாள். கீழே யாரையும் காணாமல் பதறி வெளியே ஓடினாள். காவல் துறையினர் இரண்டு மூன்று வாகனங்களில் வந்து குழுமியிருந்தார்கள். வெளியே நிறுத்தப்பட்டிருந்த எதிரிகளின் வாகனங்களை சிலர் சோதித்துக் கொண்டிருந்தார்கள். ஷங்கர் ஒரு காவல் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
அவளைக் கண்டவுடன் ராணுவர்கள் அனைவரும் புறப்பட ஆயத்தமானார்கள். Jeep இன் பின்னால் ஏறி சஞ்சய்யின் அருகில் அமர்ந்துக் கொண்டாள் லீலா. "சஞ்சய்..." அவன் கையை தன் கைகளில் புதைத்து, "நீ சொன்னத எடுத்து வந்துட்டேன்" என்றாள். பதிலாக சஞ்சய் அவள் கைகளை அழுத்தி பிடித்து தளர்த்தினான். ஷங்கர் அவசரமாக விடைபெற்று வாகனத்தில் ஏறினான். Jeep புறப்பட்டது.
ஷங்கர்தான் Jeepஐ ஒட்டிக்கொண்டிருந்தான். சஞ்சய்யின் சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்யும்படி அலைபேசியில் யாருடனோ பேசினான். இந்த எதிர்பாராத விபத்தினால், பயணத்தில் அனைவரும் அமைதியாக தீவிர சிந்தனையோடு வருவதாக தெரிந்தது. லீலாவும் அவ்வப்போது மருத்துவரிடம் சஞ்சய் பிழைத்துவிடுவான் என்ற உறுதிப்பாடுகளை பெற்றுக் கொண்டிருந்தாள்.
சஞ்சய் அவ்வீட்டை விட்டு வெளியேறும் சமயம் அடிபட்டு மயக்கத்தில் இருந்த எதிரி கூட்டத்தில் ஒருவன், தெளிந்து எழுந்தான். துப்பாக்கியை தூக்கி பிடித்து சஞ்சய்யின் கழுத்தில் சுடுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர்தான் மாடியிலிருந்து கீழிறங்கிய லீலா அதைக் கண்டாள். அவள் அவனை எச்சரிப்பதற்குள் அனைத்தும் முடிந்தது. சஞ்சயின் கண்களில் இல்லாதிருந்த கருணை இப்போது மீண்டும் திரும்பியிருக்க அவன் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கின்றான் என்பதை கண்டபோது உலகம் நின்று போனது.
வீட்டினுள் வெடிச்சத்தத்தை கேட்டதும் வெளியில் இருந்த சஞ்சயின் குழுவினர் வீட்டினுள் தெரியும் அந்த அந்நிய உருவத்தை குறிவைத்து சுட்டனர். சஞ்சய்யை சுட்டவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தது கனவென லீலாவின் கண்ணின் ஓரத்தில் கடந்தது.
சஞ்சய்க்கு திடீரென மூச்சு திணறியது. லீலா பதற்றமடைந்தாள். மருத்துவர் அவனுக்கு ஒரு குழாயில் பிராணவாயு அளித்தார். "Doctor, பிழைச்சுக்குவான்ல்ல?" என்றாள் லீலா வருத்தம் மேலிட.
"முக்கியமான veins எதுவும் பாதிக்கப்படல, லீலா. கண்டிப்பா பிழைக்க வச்சிடலாம். Dont you worry" என்று ஆறுதல் கூறினார்.
லீலா சஞ்சய்யின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். சஞ்சையோ, அவள் எதையோ யோசிப்பதையும், அவ்வப்பொழுது அழுவதையும், அவனை பார்த்து லேசாக புன்னகைப்பதையும், 'கொஞ்ச நேரத்திலேயே எத்தனை எத்தனை உணர்ச்சிகளை கடக்கிறாள்?' என்று ரசித்துக் கொண்டிருந்தான்.
"அந்த photoவ எடு" என்றான் சஞ்சய். அவனது கையை விட்டுவிட்டு, காலடியில் வைத்திருந்த படத்தை எடுத்து காட்டினாள் லீலா. "அந்த photo பின்னாடி ஒரு key hole இருக்கும். அதுல என் கைல உள்ள chainஐ fix பன்ணு"
அப்போதுதான், நேற்று காலையில் அவன் தனக்கென கொண்டு வந்த chainஐ கையில் பூட்டியிருப்பதை கண்டாள். "இத எப்போதிலிருந்து வச்சிருக்க? நேத்து நான் பாக்கலியே" எனக் கேட்டாள்.
'என்னை நன்கு கவனித்திருக்கிறாள்' என உள்ளுக்குள் மகிழ்ந்தான். "விக்கியோட பாக்கெட்ல இருந்தது."
லீலா நம்பமுடியாமல் படத்தை திருப்பி எதாவது ஓட்டை இருக்கிறதா என தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை. "ஒன்னும் இல்லையே, சஞ்சய்.." அவனை பார்த்தாள்.
புன்னகை மாறாமல், "ஓரத்துல உள்ள plasters எல்லாம் remove பண்ணிப்பாரு" என்றான்.
ஆர்வம் கொண்ட குழந்தையைப்போல படத்தை மடியில் வைத்துக்கொண்டு, plasters எல்லாம் பிரித்துப் பார்த்தாள். பின்பலகையை அசைக்க முடியவில்லை. கீழே இடது கோணத்தில் ஒரு சின்ன சாவி துவாரம் தென்பட்டது. சஞ்சய்யைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்தாள். சஞ்சய் தன் கையை காட்டி சாவியை எடுத்துக்கொள்ளச் சொன்னான். லீலாவும் அதை கழற்றி துவாரத்தில் பொருத்தினாள். பிறகுதான், பின்பலகையை எடுக்க முடிந்தது. எடுத்ததும் மடிக்கப்பட்டிருந்த பழைய காகிதங்கள் தென்பட்டன. அதை எடுத்துப் பார்த்தாள். பரீட்சையில் தேர்ச்சி பெற்ற குழந்தையின் மகிழ்ச்சியில், "எப்படி தெரியும் சஞ்சய், இந்த papers இதுக்குள்ளேதான் இருக்குனு?"
சஞ்சய் பதில் சொல்லாமல் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிற? பதில் சொல்லு..."
சத்தமாக சிரித்தான். கழுத்து வலித்தது.
"சஞ்சய்... இந்த நேரத்துலையும் விளையாடிட்டு இருக்க நீ? வலிக்குதா?"
"ம்ம்.."
"வேணும் உனக்கு. பதில் சொல்ல சொன்னா இளிச்சிட்டு இருக்கல்ல..." என முறைத்துப் பார்த்தாள்.
ஷங்கர், "லீலா, is everything alright?"
"உங்க friendஐ அடிச்சு வளர்க்காமா தப்பு பண்ணிட்டாங்க. "
"What?!"
இம்முறை எல்லோரும் சேர்ந்துச் சிரித்தார்கள். லீலாவும் சிரித்தாள். அனைவரும் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பினர். மாலை வெயில் முகத்தினில் வரப்பிரசாதமாக வந்தது. நேற்று மாலையின் மனநிலைக்கும் இந்த மாலையின் மனநிலைக்கும் எவ்வளவு வேறுபாடுகள், எவ்வளவு உணர்வுகள். எத்தனை எத்தனை விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன அனைத்தையும் மறந்து நொடியில் சிரிக்க வைத்துவிட்டான் சஞ்சய். இத்தனை நாட்களாய் வெறும் நண்பனாக தனது வாழ்வில் வந்த சஞ்சய் இன்று ஒரே நாளில் மனதில் உயர்ந்து வேறொருவனாக மாறிவிட்டான்.
லீலாவின் கை மீது கை வைத்து, "Sorry" என்றான்.
"எதுக்கு?"
இம்முறையும் பதில் இல்லை. வெறுமனே அவளை பார்த்துக் கொண்டிருந்தான். 'இந்தக் கண்களில் ஒரு கனிவு தெரிகிறது. சற்று முன்னர் வீட்டில் ஒரு அந்நிய பார்வை ஒன்று பார்த்தானே? அப்ப்பா... பசித்திருக்கும் விலங்கிற்கு கருணை கிடையாது என்பது போலிருந்தது.'
"... Yes, Sir. Mission accomplished. .... We are on our way..." என்று ஷங்கர் அலைபேசியில் பேசியது லீலாவின் காதில் விழுந்தது.
'இவ்வளவு நாட்கள் என்னோடு இருந்து எனது பொழுதுகளை களவாடிவிட்டான். இனி இவன் இல்லாமல் என் வாழ்க்கை மீண்டும் பழைய சுயற்சிக்கு திரும்ப உள்ளது. வழக்கம் மாறாத பொழுதுகளை இனி தனியே கடப்பது எப்படி இருக்குமோ' என்று சிந்தித்தாள் லீலா.
"என்ன குட்டி ராணி, யோசனை பலமா இருக்கு?" கிண்டலாக கேட்டான் சஞ்சய்.
காலையில் ராணியென விளையாடிய நிமிடங்கள் நினைவுக்கு வந்து பல்லிளித்தது. அவனை முறைத்துப் பார்த்து, "திருடா!" என்றாள்.
"ஏது?" வெடித்துச் சிரித்தான் சஞ்சய்.



Comments
Post a Comment