பூரணமான அபூரணம்

Forevermore - Kintsugi with Gladiolas by Bruno Capolongo

மேற்கத்திய நாடுகள் ஒரு படைப்பு எவ்வாறு இருக்க வேண்டும், படைக்கப்பட வேண்டும் என்பதற்கு பரிபூரணம், சமசீர்மை, கருதியல் விகிதசமம் போன்ற கூறுகளை ஒரு கோட்பாடாக உருவாக்கி அதை கெட்டியாகப் பிடித்திருக்கிறது. இவை உலகப் பொது விதிகள், கணிதம், பரிபூரணம் மற்றும் நித்தியத்திற்கான பசி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட அழகுக்கான சுவையாகக் கொள்கின்றனர். ஜப்பானிய அழகியல் சுவையோ மிகவும் வேறுபட்டது. மேற்கத்திய மொழியில் சொல்ல நேரடியான சொல்லோ சமமான அர்த்தத்திலோ ஒரு சொல் இல்லாத நிலையில், இந்த இரண்டு சுவைகளுக்கும் உள்ள வேறுபாட்டின் மையக்கரு ஒரு சொல்லில் பிடிபட்டுள்ளது - வாபி-ஸாபி (Wabi Sabi).

வாபி-ஸாபி என்பது நிலையற்றதை, அபூரணத்தை, பழமையானதை மற்றும் மனச்சோர்வின் அழகைக் குறிக்கிறது. இது இளமையான, வெல்லமுடியாத குறைபாடற்ற அன்பிலிருந்து பெறப்படுவது அல்ல. மாறாக, கடந்து செல்கிற, நொறுங்கக்கூடிய, சற்றே உடைந்த மற்றும் அடக்கமானவற்றுக்கான மரியாதையிலிருந்து பெறப்படுகிறது. காலத்தின் அடையாளங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும், தனித்துவம் கொண்டிருருக்கும் எந்த ஒரு படைப்பும் என்றைக்கும் அழகான ஒன்றாக கருதுகிறது வாபி-ஸாபி. ஒரு மட்பாண்டத்தில் மெருகூட்டப்பட்ட ஒரு சில்லு அல்லது அழகாக சரிசெய்யப்பட்ட விரிசல், கண்ணுக்கு தெரியாததாக மாற்றப்படுவதைவிட பாராட்டப்பட வேண்டும் என்கிறது வாபி-ஸாபி. உடைந்ததை சரி செய்து, மெருகூட்டும் கலையைத்தான் ஜப்பானில் கிண்ட்ஸுகி (Kintsugi) என்று அழைக்கப்படுகிறது. 

கிண்ட்ஸுகியில் உடைந்த பொருட்கள் - பொதுவாக மட்பாண்டங்கள் - தங்கத் தூசி படிந்த அரக்கு கொண்டு சரிசெய்யப்படுகின்றன. இக்கலை எப்போது தோன்றியதென சரியாகத் தெரியவில்லை எனினும் சில வரலாற்றாசிரியர்கள் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியதாகக் குறிப்பிடுகின்றனர்.

அவர்களது கூற்றின் படி, ஒரு ஜப்பானிய ஷோகன் (இராணுவ சர்வாதிகாரி) ஒரு வகையான தேநீர் கிண்ணத்தை பழுதுபார்ப்பதற்காக சீனாவுக்கு அனுப்பியிருக்கிறார். திரும்பிய கிண்ணம் ஒரே கிண்ணமாகத்தான் வந்தது, ஆனால் மோசமான உலோகப் பொருட்களை வைத்து ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தது. ஷோகனின் அதிருப்தியைப் பற்றி அறிந்த உள்ளூர் கைவினையாளர்களும் அவரை மகிழ்விக்க ஆர்வமாக இருந்தவர்களும் பழுது பார்க்கும் முறையை கவர்ச்சிகரமானதாக மேம்படுத்தினர். அப்படிதான் கிண்ட்ஸுகி பிறந்திருக்கக்கூடும் எனப்படுகிறது.

வாபி-ஸாபியின் வரலாறு பௌத்தத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அது நிலையற்ற, அபூரண மற்றும் வீரமற்ற இயல்புகள் இல்லாமல் சமாதானம் கொள்வதன் மூலம் ஞானம் பிறப்பதாக பரிந்துரைக்கிறது. 

ஜப்பானின் முதல் ஜென் புத்த கோவிலை உருவாக்கும் திட்டத்துடன், 1191 ஆம் ஆண்டு, ஏய்சேய் என்று அழைக்கப்படும் ஒரு துறவி சீனாவிலிருந்து ஜப்பானுக்குத் திரும்புகிறார். அப்போது, ஜென் ஜப்பானின் பூர்வீக மதமான, ஷிண்டோவிற்கு ஒரு சவாலாக வருகிறது. இயற்கையை அதன் நிலையான வாழ்க்கை சுழற்சிகள் மற்றும் அபூரண வடிவங்களுடன், தியானத்தின் மையமாகவும், நமது சுய மாறுநிலையையும், வெறுமையையும் புரிந்துகொள்ளும் ஆடியாக முன்வைப்பதன் மூலம் ஜென் ஒரு சிக்கலான தத்துவ அமைப்பை வழங்குகிறது. நாளடைவில், ஜென் வாபி-ஸாபியின் தத்துவ அடித்தளமாக ஆகிறது.

வாபி (侘 ) மற்றும் ஸாபி ( 寂 ) - இவ்விரண்டு வார்த்தைகளின் பொருள், 14ஆம் நூற்றாண்டில் பரிணாம வளர்ச்சியடைய ஆரம்பித்து அவை இருந்ததை விட நேர்மறையாக மாறுகின்றன. 

வாபி முதலில் மனித ஆறுதலிலிருந்து விலகி இயற்கையில் வாழ்வதன் துன்பம் மற்றும் தனிமையைக் குறிக்கிறது, ஆனால் அதன் பொருள் இப்போது ஒரு தற்சார்பு உயிரினத்தின் கிட்டத்தட்ட மீயழகு கொண்ட கசப்பும் இனிமையும் கலந்த மனச்சோர்வைக் குறிக்கிறது.

இதற்கிடையில் ஸாபி, முதலில் குளிர்ந்த, மெலிந்த அல்லது வாடியதைக் குறிக்கும் சொல்லாக இருந்தது. இப்போது இது ஒரு பொருளை மேம்படுத்தக்கூடிய, வயதையும் தேய்மானத்தின் அடையாளங்களையும் குறிக்கத் தொடங்கியது. இது காலத்தின் நிலையற்ற தன்மையையும், வரவேற்பையும் மற்றும் உன்னத அறிகுறிகளையும் நேர்மறையாக குறிக்கின்றது. ஒரு பழங்கால வடிவமைப்பில் உள்ள பானை அல்லது அழகாக சரிசெய்யப்பட்ட ஒரு விரிசல் இப்போது 'ஸாபி' என்று அழைக்கப்படுகிறது.

பரிபூரணத்தைப் பின்தொடர்வதை வழக்கமாகக்கொண்ட இன்றைய உலகில் நாள்பட்ட அதிருப்தி, உடல் சோர்வு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை நம்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. நாம் நம்பமுடியாத தரங்களுக்கு நம்மை உட்படுத்திக்கொண்டு, அடைய முடியாத ஒரு இலட்சியத்தை கடுமையாக துரத்துகிறோம். அழகான ஆண்களும் பெண்களும் தங்களுக்குப் பிடித்த பானத்தை ரசித்துக் கொண்டு, எப்போதும் சிரித்த முகத்துடன் கூடிய பேஷன் மாடல்களின் கூட்டத்திற்கு மத்தியில் நடனமாடுவதைத்தான் தற்போதைய விளம்பரங்கள் நமக்குக் காட்டுகின்றன. இந்த சமரசமற்ற பரிபூரண மகிழ்ச்சியின் காட்சி நம்மை நோக்கி "உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று ஒலிபெருக்கி வைத்து கத்துவதாக உணர்கிறோம். எனவே, ஒரு வாழ்க்கை முறை இலட்சியத்தின் வழியே மேன்மையை பிரதிபலிக்க முயற்சிக்கிறோம்.

நம்மையும், நம் வாழ்க்கையையும், நமது சுற்றுச்சூழலையும் மாற்றியமைப்பதற்காக நாம் கழுத்துவரை செலவழிக்கிறோம். பின்னர் அதை புகைப்படம் எடுத்து மற்றும் காணொளி பதிந்து, நமது வாழ்க்கையின் நேர்த்தியை உலகுக்குக் காட்ட சமூக வலைத்தளங்களில் நிரப்புகிறோம். பரிபூரணத்தை நாம் சாதிக்க வேண்டிய லட்சியமாக வைத்திருக்கிறோம் - ஒரு முழுமையான சமச்சீரான முகம், வடிவாக செதுக்கப்பட்ட உடல், அழகான முடி, சீரான தோல், தாடை, வீடு, நண்பர்கள், குடும்பம், துணைவர், குழந்தைகள், விடுமுறைகள்; அல்லது சுருக்கமாக - தவறு இல்லாமல் இருத்தல்.

வாபி-ஸாபி பூரணத்தின் நாட்டத்தை நிராகரித்து அபூரணத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள சொல்கிறது. வாபி-ஸாபியின் பின்னணியில் உள்ள தத்துவமானது, இலட்சிய வாழ்க்கையைத் துரத்தும் வெள்ளெலி சக்கரத்திலிருந்து தப்பிக்க நமக்கு உதவுவதோடு, இருப்பதைப் பாராட்டவும் கற்றுக்கொடுக்கிறது - பூரணமான அபூரணத்தை. நமது குறைபாடுகளை மறைப்பதற்குப் பதிலாக, வாபி-ஸாபி நமது "குறைபாடுகளை" ஏற்றுக்கொள்ளும்படியும், மேலும் அவற்றில் கவனம் செலுத்தவும் ஊக்குவிக்கிறது.

பூரணமான அபூரணத்தை கொண்டாடுவோம்!

Comments