அன்பானதோர் அறிவிப்பு!
அன்பானதோர் அறிவிப்பு:
அன்பான,அறிவான,அறிவு முதிர்ந்த,கற்ற,வேலை செய்கிற,வேலை ஓய்வு பெற்ற,ஆஜான பாஹு...ஐம்பதுகளில்
ஒரு தந்தை தேவை!
என்னடா இது கல்யாண வயதை எட்டிய... இல்லை இல்லை தாண்டியப் பெண், மணப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் செய்யாமல் தந்தை தேவை என விளம்பரம் செய்திருக்கிறாள் என்று தானே யோசிக்கிறீர்கள்? நியாயம்தான். ஆனால் என் தேடலைத்தானே விளம்பரம் செய்ய இயலும்.
வயது வரம்பென்று பார்த்தால் ஐம்பத்தைந்து வயதுக்கு மேலே உள்ள ஆணாக இருக்கலாம். பெரிய பணக்காரராக இருக்கவேண்டுமா? என்று கேட்டால், அவசியமில்லை. அவரவரளவில் அவரவர் இயன்றத்துக்கேற்ப வெற்றிகரமாக இருந்தாலே போதுமானது. ஏனெனில், நான் பணத்தேவைக்காக என்று நேரடியாக சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு தந்தை வேண்டும் என காதில் பூ சுற்றுகிறேன் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. எனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள என்னால் இயலும். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வளர்ந்தப் பெண்தான் நான்; பொருளாதார அளவில் சுந்தந்திரமாக செயல்படக்கூடிய, செயல்படவிரும்பும் பெண்தான்.
வயதாகினாலும் தலையில் முடி அதிகம் இருக்கும் ஆண்கள் அழகாக இருப்பர். எந்தப் பெண்ணை வேண்டுமென்றாலும் கேட்டுப் பாருங்கள், 'ஆம்' என்பார்கள். உங்கள் மனைவியிடம் கேட்டீர்கள் என்றால் மன்னிக்கவும். என்னையல்ல, அவர்களை. ஏனெனில் மனதிற்குள்ளேயே ரசித்துவிட்டு உங்கள் மகிழ்ச்சிக்காக பொய் சொல்லலாம். ஆக, நரை எட்டிய முடியிருந்தாலும் பரவாயில்லை. முடியிருந்தால் போதும்.
பிறகு முடிந்த அளவு எந்த பெரிய நோய்களும் இல்லாமல் இருத்தல் நலம். எதாவது இருந்தாலும் எழுந்து மெது நடை, மெது ஓட்டம் போடும் அளவாவது இருத்தல் சிறப்பு. அதனிலும் சிறப்பு, அவரது மருத்துவ செலவுகளை அவராகவோ அல்லது அவரது உறவினர்களோ பார்த்துக் கொள்ளும்படி இருப்பது. உடம்பு முடியாம கிடக்குறவருக்கு கொஞ்சம் உதவி பண்ணின என்னவாம் இவளுக்கு? என உங்களுக்கு தோன்றலாம். என்னுடைய அப்போதைய பொருளாதார நிலையையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா? அதை இப்போதே எப்படி முடிவு செய்வது? அதோடு, என்னை அறிந்தவருக்கு நான் எப்படி என்பது தெரியும்.
எதாவது ஒரு பொழுதுப்போக்கை விரும்பி செய்பவராக இருக்க வேண்டும். எதைப் பற்றியாவது புலம்பி அறுப்பதை பொழுபோக்கென கொண்டிருப்பவர்கள் இப்பொழுதே இதைப் படிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் வேலையைப் பார்த்துச் செல்லலாம். அன்றாடம் எதையாவது புதியதாக செய்யவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அதுவும், ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு உள்ளவராயின் மிகச்சிறப்பு.
இவையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல உரையாடலை நிகழ்த்துபவராக இருக்கவேண்டும். எப்பொழுதும் தான்தான் வெற்றி பெறவேண்டும் என்ற தொனியிலேயே பேசிக் கொண்டிராமல், நல்ல விஷயங்களை நிதானமாக பரிமாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும். வேண்டிய பொழுது அரவணைத்து, நான் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கவேண்டும். தவறாக இருப்பின் நேர்மையா சுட்டிக்காட்ட வேண்டும். முடிவெடுக்க கடினமாக இருக்கும் தருணங்களில், 'என்ன வேணும்னாலும் செய்மா, பாத்துக்கலாம்' என்று துணை நிற்கும் ஒருவராக இருக்கவேண்டும். சாக்ய பாவம் போற்றும் உறவாக அமைந்தால் இத்தேடலில் ஒரு திருப்தி அடைவேன்.
எனது இந்த ஆசையை சமீபத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்ன் லவ் 2 என்ற ஒரு தொடரில் வரும் ஒரு எபிஸோடில் வெளிவந்திருந்ததைப் பார்த்தேன். நான் பயந்தது போலவே, அப்பெண் தேர்ந்தெடுத்த ஆடவன் அவள் உடல் சுகத்திற்காகத்தான் தன்னை அணுகி அன்பாக இருப்பதாக எண்ணுவான். இதுவரை நான் எழுதியதைப் படித்தவர்கள் உண்மையிலேயே அப்படித்தான் என்னை எண்ணினீர்களா என்று நான் அறியேன். அப்படி தாங்கள் எண்ணியிருந்தால் மன்னிக்க வேண்டும். அதற்கு நான் 'சுகர் டாடி தேவை' என்றே விளம்பரம் செய்திருப்பேன்.
போகட்டும். இன்னும் சில வருடங்களில் பேரிளம் பருவத்தை அடையவிருக்கும் இப்பெண்ணின் தேடல் நிறைவுறும் என்று நினைக்கிறீர்களா? ஊதிய காட்டுமுள்ளங்கி மலரின் (Dandelion) விதைகள் அத்தனையும் முளைக்கவா செய்கின்றது!


Comments
Post a Comment