விறகுகள் - பகுதி 6

இந்த மண்ணை பிரிந்தாக வேண்டும் அது மட்டுமே தன் நினைவில் இருந்தது லிண்டாவிற்கு. தன் துணிப்பையை சுமந்துகொண்டு துறைமுகத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் குழுமி உட்கார்ந்திருந்த கூட்டத்தோடு அவளும் அமர்ந்தாள். 

'ஸ்ஸ் ஆ....'

'சத்தம் போடாதீங்க' என்று முன்னாள் உட்கார்ந்திருந்தவன் எச்சரித்தான்.

லிண்டா பம்பரமாய் சுழன்றுக்கொண்டிருந்தாள். நல்லவேலையாய் அப்பா இஷாக் தொழுகைக்கு மசூதிக்கு சென்றிருந்தார். ஹென்றா இரவு வீட்டிற்கு வந்தபோது நேராக லிண்டாவை தேடிக்கொண்டு அவள் அறையில் நுழைந்தான். "அக்கா! அக்கா!" படுக்கையின் மீது ஒரு பெட்டி திறந்திருந்தது. ஹென்றாவின் பின்னாலிருந்து லிண்டா கொஞ்சம் துணிகளை எடுத்து வந்து பயணப்பெட்டியில் அடுக்கினாள்.

"அக்கா என்ன பண்ணிட்டு இருக்க? எதுக்கு இப்போ துணி எல்லாம் எடுத்து வைக்கிற?"

"இந்த ஊர்லையே நான் இனி இருக்க போறதில்ல."

"என்ன சொல்ற? எங்க போற? இப்போவே ஏன் பெட்டிய தயார் பண்ற? சாயங்காலம் சித்தப்பா கிட்ட என்ன பேசின?" கேள்விகளை அடுக்கினான் ஹென்றா.



"அவர்கிட்ட ஏஜென்ட் நம்பர் வாங்கி வேண்டிய ஏற்பாடு பண்ணிட்டேன்."

துணிகளை மடித்துக்கொண்டிருந்த லிண்டாவின் கைகளை பிடித்து நிறுத்தினான், "என்ன ஏஜெண்டு? தெளிவா சொல்லுக்கா... எங்க போற?"

"அவர் மக மலேசியாவுல தானே இப்போ வேலை பார்க்கிறா..."

லிண்டா சொல்லி முடிக்கும் முன்னே, "மலேசியா போறியா? உனக்குத்தான் பாஸ்போர்ட் ஒன்னும் இல்லையே? எப்படி ஏற்பாடு பண்ணின? காசுக்கு என்ன பண்ணின?"

"நா சேர்த்து வச்சதுளிருந்து எடுத்துட்டேன். நம்ம துறைமுகத்துக்கு போய் சேர்ந்ததும் பாஸ்போர்ட் கைக்கு வந்துடும். இன்னும் ஒரு நாள் இந்த வீட்டுல இருக்கமாட்டேன். என் வாழ்கைய கண்டவனுக்கும் எழுதி கொடுக்க அவர் யாரு? அப்பா என்றதுக்காக என்னை பழிகொடுக்கவும் செய்வாரா?" 

"ஆமா அப்பா எங்க? இல்லக்கா நான் உன்ன போக விடமாட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா, அதை நேரடியா சொல்லி பிடிவாதமா இரு. அதுக்கு ஊரைவிட்டு போகணும்னு என்ன அவசியம்? மாமா எல்லாம் ஒரு ஆளுன்னு அவனைப் பார்த்து பயப்படுறியா? நான் உன்னை போக விடமாட்டேன்." ஹென்றா அவளது பயணப்பெட்டியிலிருந்து துணிகளை எடுத்து வெளயே வீசினான்.

"ஹென்றா, என்னைய தடுக்காத. அக்காவை என்னென்ன பண்ணிருக்கான் அவன்னு தெரியும்ல. அதெல்லாம் தெரிஞ்சதும் அரிவாளை எடுத்துப் போய் அவனை வெட்டிருக்க வேண்டாம்? நம்ம அப்பா என்ன பண்ணினாரு? அவனுக்கே என்னைய தர எப்படி ஒத்துக்கிட்டாரு?"

"இல்லை... அக்கா நீ இல்லாம.... நா என்ன பண்ணுவேன்?"

"நீதான் என் தைரியம். நீ மட்டும்தான் இப்போ என்னுடைய பலவீனமும், ஹென்றா. தயவு செய்து என் வைராக்கியத்தை உடைக்காத. நீதான் இனி ஒரு நல்ல மகனா அவருக்கான கடமைகளை செய்யணும். உன்னைய கண்டிப்பா தொடர்பு கொள்வேன். ஆனா, இப்போ நான் இப்போ எங்க போரென்றது எதுவும் இங்க உள்ள இன்னொரு உயிருக்கு தெரியக்கூடாது. சித்தப்பா கிட்ட வேற யாருக்கோ தேவைனுதான் உதவி கேட்டேன். அவருக்கு சந்தேகம் வந்து வெளிப்படுத்தாம நீதான் பார்த்துக்கணும்." லிண்டா பெட்டியை இறுக்கி மூடினாள். பெட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறினாள். 

ஹென்றா முன்னால் வந்து தடுத்தான். "அக்கா வேணாம் அக்கா... போகாத!"

"விலகு ஹென்றா தடுக்காத. அப்பா வரதுக்குள்ள நா போயாகணும்" ஹென்றாவை தள்ளிக்கொண்டு முன்னேறினாள்.

"அக்கா அக்கா...." என்று அவளது கையை பிடித்து இழுத்தான். 

"என்னை விடு! நா ஒன்னும் மாடு இல்ல பலி கொடுக்க, ஹென்றா. நா படிச்சவ. எனக்குன்னு ஆசைகள் இருக்கு. நா இன்னொரு குசுமா ஆக விரும்பல. என்னைய தடுக்காத..." பலம் கொண்டு அவள் கையை பின்னால் இழுத்தான் ஹென்றா. "ஹென்றா!!!" 

முதல் முறையாக அக்கா தன்னை அறைந்ததில் ஹென்றா உறைந்துப்போய் நின்றிருந்தான். கண்களிலிருந்து மளமளவென தண்ணீர் கொட்டியது. லிண்டாவாலேயே தான் செய்த செயலை நம்ப முடியாமல் இருந்தாள். தம்பி அழுவதைக் கண்டு அவனை கட்டிக்கொண்டாள். "ஹென்றா... அக்காவை மன்னிச்சுடு. அக்காவை மன்னிச்சுடு."

குழந்தை ஒன்று அம்மாவிடம் தன் காலை எதோ கடிப்பதாக புகார் வைத்தாள். அம்மா காலை பரிசோதித்து, ஒரு அட்டை பூச்சியை பிடுங்கி எறிந்தாள். சிறிது நேரத்தில் ஒரு மீனவ படகு அவர்கள் இருந்த காடு பக்கம் தரை தட்டி நின்றது. அனைவரும் எழுந்து கொண்டார்கள். 'நான் முதலில் போய்விட வேண்டும்' என்ற அவசரம் ஒவ்வொருவரின் உடலிலும் தெரிந்தது. தானும் ஒர் அவசர ஜீவியாக படகுக்குள் துணி மூட்டையை வீசி ஏறிக்கொண்டாள். போதும் போதும் என்றளவுக்கு கூட்டத்தின் ஒரு பகுதி ஆட்களை ஏற்றிக்கொண்டு படகு நகர்ந்தது. 

அங்கிருந்து அரை மணி நேரத்தில் ஒரு பெரிய படகிற்கு அனைவரும் மாற்றப்பட்டார்கள். ஐந்தரை மணி நேரங்கள் கடலால் அங்கலாய்க்கப்பட்டு அனைவரும் ஒரு வித போதையில் களைப்புடன் இருந்தார்கள். மலேசியாவின் ஒரு சதுப்பு நில பகுதியில் மீண்டும் ஒரு சிறுபடகில் வந்தடைந்தனர். கடவு சீட்டையெல்லாம் கப்பலிலேயே எடுத்துக் கொண்டிருந்தார்கள் முகவர்கள் இருவர். தரை தட்டிய மாத்திரத்தில் அவர்களை ஒரு கொள்கலனில் தங்குமாறு சொல்லிவிட்டு எங்கோ மறைந்துவிட்டனர். காலையில் அனைவரும் விழித்ததும் முகவர்கள் இன்னமும் வராதிருக்கக் கண்டு அனைவரும் சற்று பதற்றமாக இருந்தார்கள்.

மதிய உணவு வேலைக்குத்தான் அந்த முகவர்கள் வந்தனர். ஒருவர் இருவராக அழைத்து எவருடனோ அனுப்பி வைத்தனர். தன் முறை வரும்போதுதான் என்ன நிகழ்கிறதென்று லிண்டாவால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னை ஒரு வீட்டு பணியாளராக ஒருவருடன் அனுப்பி வைக்கப்பட்டாள். ஆறு மாதங்கள் கழித்துதான் தன்னுடைய கடவு சீட்டுகள் தரப்படும் என்றும், பிற பத்திரங்கள் யாவும் முதலாளியிடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மலேசிய நாட்டின் இயற்கை வளங்களை கடந்து ஒரு சிறு நகரத்தின் பெரிய வீட்டிற்கு வந்தடைந்தாள். தன்னுடன் வந்தவர், ஒரு சீனப்பெரியவர், நெடியவர். தன்னுடைய மனைவியுடனும், தனது பேரர் பேத்தியுடன் வாழ்பவர். அவரது பேரர்களை கவனித்துக் கொள்ளத்தான் பணியாளராக தன்னை அமர்ந்தியிருந்தார். ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் அங்கே வேலை பார்த்தாள் லிண்டா. அந்த பெரியவரின் மகனும் மருமகளும் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்தனர். அவர்களின் வருகையால் தன்னை வேலையிலிருந்து நிறுத்தியிருந்தனர். 

ஆனால் அந்த இரண்டு வருடங்களில் பிறிதொரு நாட்டில் எவ்வாறு வாழ்வதென கற்றுக்கொண்டிருந்தாள். முதல் இரண்டு மாதங்கள் பணம் சேர்த்து ஒரு கைப்பேசியை வாங்கினாள். முதலில் ஊரின் மத்தியில் இருக்கும் டீக்கடைக்கு அழைத்தாள். ஆனால், மலேசியாவிற்கு வந்த சில நாட்களிலேயே தொடர்பு கொண்டால் மாமாவிற்கு தெரிந்துவிடும் என்று உடனே அழைப்பை துண்டித்தாள். கொஞ்ச நாட்களிலேயே மலேசியாவின் மக்களையும் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொண்டாள், லிண்டா. வேலையிருந்து நீக்கப்பட்டபின் கடவுசீட்டை பெற்றுக்கொண்டு தலைநகரத்தில் சில மாதங்களைக் கழித்தாள். பின்னர் கிள்ளான் பெருநகரத்திற்கு பெயர்ந்தாள். ஒர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினாள். விரைவிலேயே அருகிலுள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலையில் வேலையையும் தேடிக்கொண்டாள். சில மாதங்களில் ஒரு பங்களாதேஷிய ஆடவனிடம் காதல் கொண்டு மணந்து கொண்டாள்.

தொடரும்...

Comments