விறகுகள் - பகுதி 8

"அஸ்ஸலாமுலைக்கும் செலாமாட் பாகி, பா சிக்."

"வஸ்ஸலாமுலைக்கும், டிக். சௌக்கியமா?"

"சௌக்கியம்தான் பா.. தம்பி நீங்க என்கிட்ட பேசணும்னு சொல்லிருந்தான். நான்தான் அவனுக்கு இருக்கிற ஒரே அக்கா. என் பேர் லிண்டா ரோஸ்மாவர்ணி. போன வருஷம்தான் எங்க அப்பா இறந்தார். தம்பி சொல்லிருப்பான்."

" ஆமா லிண்டா..."

"நாங்க ரெண்டு பேரும்தான் குடும்பம் இப்போதைக்கு. நா இப்போ மலேசியால இருக்கேன், எனக்கு திருமணமாகிட்டது. இங்கதான் வேலை செய்யறேன். ரப்பர் தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளிதான். மாஸ் காவின் தயாரா இருக்கு, வாங் ஹந்தாரான் எங்களால முடிஞ்ச அளவுக்கு செய்யப்பார்க்கிறோம். ரத்னாவை நல்லபடியா பார்த்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க பயப்படவேண்டியதில்லை..."

"ஹாஹாஹா ரத்னாவை ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம்...."

கலக்கி வைத்திருந்த தேநீரை எடுத்து லிண்டா குடித்தாள். காலைக் கதிரவனின் ஒளி முகத்தில் படரத்தொடங்கியது. காலையியிலேயே ரத்னாவின் அப்பாவிடம் ஹென்றா புறப்படுவதற்கு முன்பே பேசிவிடவேணும் என்று முடிவு செய்தாள். முதலில் தொழிற்சாலைக்கு அழைத்து அவசர விடுமுறைக்கு சொன்னாள். பின்பு ஹென்றா கொடுத்திருந்த எண்களுக்கு அழைத்தாள்.

"அப்படி வேற ஏதாவது பேசணும்னா நீங்க என்னுடைய இந்த எண்களுக்கே தொடர்புகொள்ளலாம்."

"கண்டிப்பா கண்டிப்பா."

காணொளி அழைப்பின் தொடர்பை துண்டித்தாள். இன்று இரவு 11 மணிக்கு ஹென்றாவிற்கு பயணம். ஒன்பது மணிவரை நேரம் இருக்கிறது. தான் மலேசியாவில் ரசித்த சுவைத்த அனைத்தையும் அவனுக்கு காட்டவேண்டும், சேர்ந்து உண்ணவேண்டும் என்று ஆசைப் பிறந்தது. கணவனுக்கு தனது திட்டத்தை பற்றி ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஹென்றாவை அழைத்தாள்.

"ஹலோ, ஹென்றா எழுந்துட்டியா?"

"நா இப்போதான்கா குளிச்சுட்டு வெளில வரேன்."

"சரி, வா சாப்பிட போகலாம். இன்னைக்கு சுட்டி போட்டுட்டேன், ஆகா இரவு ஒன்பது மணிவரை உன்கூடத்தான்."

"ஐ, ஜாலி பன்றோம்! பேக் பண்ணிட்டு இன்னும் ஒரு அரை மணிநேரத்தில் வந்துடுறேன், அக்கா. எங்க சாப்புடுறோம்?"

லிண்டா முகவரியை விவரித்துவிட்டு, தயாரானாள். ஒரு வாடகை வண்டிக்கு ஏற்பாடு செய்தாள். தம்பியும் சொல்லிய நேரத்திற்கு வந்து சேர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் வண்டி வந்தவுடன். அருகே உள்ள மிக பிரபலமான ஒரு இந்திய கடையில் உணவுண்டனர். அங்கிருந்து ஷா அலாமில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றனர். அங்கிருந்த வளாகத்தில் சில பொருட்களை வாங்கி கொடுத்தாள் லிண்டா. பின்னர் அங்கிருந்து, தேசிய மசூதியான, மஸ்ஜித் புத்ராவிற்கு சென்றனர். நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அந்த இளஞ்சிவப்பு கட்டிடத்தின் முன்னே நின்று சில போட்டோக்களை எடுத்துக்கொண்டார்கள். மசூதியின் நிழலில் அமர்ந்துகொண்டு நதியை பார்த்துக்கொண்டிருந்தனர்.

"ரத்னாவின் அப்பாவோட பேசிட்டேன், ஹென்றா."

முகமெல்லாம் புன்னகையோடு, "நிஜமாவா அக்கா? என்ன சொன்னாரு?"

"இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடத்தப்போறதா யோசிச்சிட்டு இருக்காராம். அதான் வாங் காவின் எல்லாம் நான் தயாரா பண்ணிடுறேன்..."

அவள் முடிக்கும் முன்பே ஹென்றா குறுக்கிட்டான், "அக்கா... அக்கா நீங்க ஒன்னும் தயார் பண்ணவேண்டாம். எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்."

"டேய் நீ மட்டும்தான். என் குடும்பம். நான் வேற யாருக்கு பண்ணப்போறேன்? என் உரிமை இது. அக்கா, நீ சின்னவயசுலையே எங்களுக்கு நிறைய பண்ணிட்ட. இப்பவும் உன்னைய கேக்கறது நியாயமா இருக்காது."

"அவளோ வளர்ந்துட்டியா நியாயம் அநியாயம்னு பேச. நா குடுத்தே தீருவேன்" என்று லிண்டா முறைத்தாள்.

"ஐயோ.. சரி வாங் காவின்கு வேண்டாம். வாங் ஹந்தாரன் வேணும்னா நீ பண்ணிக்கோ." என்றான்.

ஈ காட்டி சிரித்தாள் லிண்டா, "பசிக்குதுல்ல? வா கிளம்பலாம்."

அவர்கள் சிறு நகரத்தில் அமைந்த உணவு விடுதி ஒன்றில் உண்டுவிட்டு, நேரே விமான நிலையத்திற்கு கிளம்பினர். மாலைநேர நெரிசலை எல்லாம் கடந்து விமான நிலையத்தை அடைவதற்கு நேரம் சரியாக இருந்தது.



"அப்பப்பா, என்ன நெரிசல்!" என்றான் ஹென்றா.

"டேய், பாஸ்ப்போர்ட் பயணசீட்டெல்லாம் வச்சிருக்கல்ல? சரிபார்த்துக்கோ."

"எல்லாம் சரியா இருக்கு அக்கா!"

"சரி, ஊருக்கு போய் சேர்ந்ததும் கால் பண்ணு. அப்புறம் வீட்ல..." வீட்டில் யாரும் இனி இல்லை என்பது நினைத்து அப்படியே நிறுத்தினாள்.

"நான் இப்போ நண்பர்களோட தங்கியிருக்கேன், அக்கா. அந்த வீட்டுல இப்போ யாரும் இல்லை. மாசத்துக்கு ஒருத்தடவ அங்க போய் பார்த்துட்டு வரேன். இனிமே ரத்னா வந்தாதான் அந்த வீட்டுக்கு போகணும்" என்றான்.

"சரி, உடம்ப பார்த்துக்கோ."

"நீயும்..." லிண்டாவை அணைத்துக்கொண்டான் ஹென்றா. பின்பு திரும்பி நேரே சாவடியை தாண்டி உள்ளே சென்றான்.

வெளியே வந்து வாடகை வண்டியில் ஏறிக்கொண்டாள். நேரே விடுதிக்கு செலுத்த சொல்லி கண்களை மூடிக்கொண்டாள். ஏற்கனவே தனிமைக்கு பழகியிருந்தாலும். மீண்டும் ஒரு தனிமையை லிண்டா உணர்ந்தாள். அது ஏனோ மனம் பிரிவுகளை பழக்க மறுக்கிறது. எத்தனை முறை நேர்ந்திருந்தாலும் ஒவ்வொருமுறையும் புதிதாக உணர்கிறது.

தொடரும்...

Comments