விறகுகள் - பகுதி 9

*சந்தோஷமா இருக்கியா?*

*உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?*

ஆதி ஓடிவிட்டது தனது மூளைக்கு நன்கு புரிந்ததும் லிண்டா முதலில் தேடிப்போனது ஒரு மருத்துவகத்தைத்தான். 'தனியாக வாழ்வதே சவாலாக உள்ளது, இதில் இன்னொரு ஜீவனை எப்படி வளர்ப்பது. அதுவும் தனக்கென்று அடையாளமற்று திரிந்து இந்த ஊரில்? நிலையான வேலையோ, வருமானமோ, இருப்பிடமோ இல்லாமல்? அவன் உடன் நிற்பான் என்ற நம்பிக்கையினால் தானே இந்த உயிரை ஏற்றேன்!'

"மிஸ் லிண்டா! மிஸ் லிண்டா"

சிந்தனையிலிருந்து விடுபட்டு லிண்டா மருத்துவரின் அறைக்குள் சென்றாள்.

"மிஸ் லிண்டா, கரு கலைப்பது சட்டப்படி குற்றம்ன்றது தெரியும்ல? நீங்க இங்க illegalலா பண்ண வந்திருந்தாலும், கருவை கலைக்க முடியுமா இல்லையானு டெஸ்ட் பண்ணித்தான் முடிவு பண்ணனும். Are you sure?" கறாராக பேசினார் அந்த பெண் டாக்டர்.

"ஆமா, டாக்டர்."

"சரி. அங்க போய் படுத்துக்கோங்க."

ஒரு புழலிலிருந்து களிம்பை துமித்து தடவி, வேண்டிய சோதனைகளை செய்தனர். ஒரு மூன்று மணி நேரத்தில் சோதனை அறிக்கை வந்துவிடுமென்று கூறி காத்திருக்க செய்தனர். லிண்டா மதிய உணவு உண்டுவிட்டு மீண்டும் மருத்துவகத்திற்கு வந்து காத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் வரவேற்பாளரும் அழைத்தார்.

டாக்டர் அருகில் வந்து அமரும்வரை அறிக்கையை பார்த்துக்கொண்டிருந்தவர், அமர்ந்ததும் பெருமூச்செறிந்தார். "மிஸ் லிண்டா! உங்கள் அறிக்கை வந்துவிட்டது. பாதுகாப்பான முறையில் கலைக்கும் காலத்தை நீங்க கடந்துட்டீங்க. Sorry to inform you, நாங்க இனி ஒன்னும் பண்ணமுடியாது.”

லிண்டாவிற்கு இடி விழுந்தது போலிருந்தது, வெளியேயும்தான். “டாக்டர் அப்டி சொல்லாதீங்க. என்னால வளர்க்க முடியாது. இத...”

“It’s already late now, லிண்டா. பாதுகாப்பற்ற முறையை நாங்க கையாள விரும்பலை. நீங்க இந்த பிள்ளையை பெற்றுத்தான் ஆகணும்.”

கைவிடப்பட்டவளாக அந்த அறிக்கையை வாங்கிக்கொண்டு மருத்துவத்தை விட்டு வெளியேறினாள், லிண்டா. அடை மழையால் அங்கேயே காத்திருக்க வேண்டியதாக இருந்தது. தன் மேலே சாரல் தெறிப்பதுகூட அறியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். 'அவன்தான் இதற்கு காரணம்! அந்த கோழைக்காக காத்திருந்து வளர்ப்பாதா? முட்டாள்தனம்.' குஸுமா அக்காவைப்போல தானும் இப்போது ஒரு முட்டாளாகிவிட்டதாக தோன்றியதும், கண்களில் தண்ணீர் பொலபொலவென்று வடிந்தது. 'அவள் ஒரு குழந்தைக்காக கண்ணீர் வடித்து, உயிரையே விட்டுவிட்டாள். நானோ குழந்தை வேண்டாமென கண்ணீர் விடுகிறேன். அவள் மட்டும் இன்று இருந்திருந்தால் இப்போதே.... சரி, ஒரு பொருளைப்போல என்னை மறந்துவிட்ட அவன் கொடுத்த இதுவும் இனி ஒரு பொருள்தான். அக்காவைப்போல யாரவது இங்கு இருக்கமாட்டார்களா என்ன?'

சில நாட்களிலேயே, தான் கர்ப்பமாக உள்ளதை அவள் தங்கியிருந்த அறையிருந்தவர்கள் அனைவருக்கும் தெரியவந்தது. செய்தி மெல்ல மெல்ல பரவி அது யாருடைய குழந்தையாக இருக்கும் என அயலவர்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். பிள்ளையை பெற்றா கையேடு இந்த றையை காலி செய்து வேறெங்காவது போகவேண்டும் என்று முடிவு செய்தாள். அத்தனை மாதங்களில் வயிற்றை மட்டும் வளர்க்காமல் தைரியத்தையும் வளர்த்து குழந்தைகளை பணத்திற்கு வாங்குவோரின் தகவல்களை சேகரித்தாள். அனாதை ஆசிரமங்களில் விசாரித்தபோது பல அதிகாரபூர்வ ஆவணங்களை கேட்டு பயமுறுத்தினார். ஆதலால் அந்த முயற்சியை கைவிட்டாள். இறுதியாக ஒரு காமதரகன் வழியாக ஒரு தம்பதியருக்கு குழந்தை அவசியமாக இருக்கிறது என்று கேள்வியுற்றாள்.


பெருவலி வந்த நாளன்று குழந்தையை பெற்றெடுத்தாள். அதை அந்த மலாய் தம்பதியருக்கு அவளே கைமாற்றினாள். தான் எப்போவாவது வந்து பார்க்கலாம் என்று கருணை காட்டினார்கள். அன்று இரவு, அந்த தரகன் தன் கைகளில் ஐயாயிரம் ரிங்கிட் கொண்ட பையை கையில் திணித்தான். விறகு விற்றது, வியாபாரம் ஆனது. மறுநாள் அங்கிருந்து கிளம்பி கிள்ளான் பெருநகரத்திற்கு சென்றாள்.

*உனக்குன்னு பிள்ளை பெத்துக்கல?*

*... பெத்துக்கல?*

*சந்தோஷமா இருக்கியா?*

*உனக்குன்னு...*

"அக்கா, தூங்கிட்டிங்களா? இடம் வந்துடுச்சு. மொத்தம் 250 ரிங்கிட்."

"ஆ... நன்றி. இதோ..." பணத்தை கொடுத்து விட்டு காரிலிருந்து இறங்கினாள். "நன்றி."

அறைக்குச் சென்று, குளித்துவிட்டு படுத்தாள். மனதை அமைதி படுத்த முடியாமல் அலைபேசியில் காணொளிகள் பார்த்துக்கொண்டிருந்தாள். சிரமப்பட்டு தூங்கினாள். நாளை மீண்டும் ஒரு வேலை நாள்.

தொடரும்...

Comments